பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

169


அநியாயத்தை நியாயமாகவும் கருதுவது; நீதியை அநீதியாகவும், அநீதியை நீதியாகவும் கருதுவது; நிலையானவற்றை நிலையில்லாதனவாகவும், நிலையில்லாதனவற்றை நிலையானவையாகவும் கருதுவது. இன்றையச் சூழ்நிலையில் அறியாமையே அறிவு என்று நம்பப்படுகிறது. அஃது உயிரின் இயல்பன்று; இயல்பான விருப்பமும் அன்று. உயிர் சார்ந்துள்ள ஆணவம் உயிரை இப்படி ஆட்டிப் படைக்கின்றது. உலகியலில் கூட, சேரத்தகாதவருடன் சேர்ந்து விட்டால் அவர் சொல்லுகிறபடி ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்படி ஆடாமல் இருந்தால் அவர்கள் தொல்லை கொடுப்பார்கள். அதனால்தான் பேயோடாயினும் பிரிவு தீயது என்றனர் சான்றோர். இது போலத்தான் ஆணவம்! நிலத்தியல்பால் தூய தண்ணீர் கெட்டுப் போகிறதல்லவா? அதுபோல உயிரும் ஆணவத்தின் கூட்டால் அல்லற்படுகிறது; துன்புறுகிறது.

ஆணவம், தன்முனைப்பைத் தரும்; தெரியாதது ஒன்றுமில்லை என்று கருதச் செய்யும்; தம்மினும் அறிவும் திறனும் உடையார் இல்லை என்று எண்ணச் செய்யும்; தருக்கி நடக்கத் தூண்டும். அதனிடம் பணிவும் இல்லை; அதனால் பண்பும் இல்லை. இதனால் அறிவு வாயில்கள் அடைபட்டுப் போகின்றன. மேலும் எதையும் எவரையும் அலட்சியப் படுத்துகின்ற புத்தி தோன்றிச் செயற்படும். இதனால் உயிர், தான் சார்ந்த ஆணவத்தின் தன்மையாகவே மாறிவிடுகிறது; தன் நிலையை இழந்து விடுகிறது. இந்த இருண்ட சூழ்நிலையில் விண்வெளி மின்னலெனத் திருவருள் வழி காட்டுகிறது. இருட்டில் அலைந்து எய்த்த உயிருக்கு ஓர் உயிர்ப்புத் தோன்றுகிறது. அறிகருவிகளையும் செயற்கருவிகளையும் திருவருளால் பெறுகிறது; சிந்திக்கிறது. இதனை “நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார்?” என்ற பாடல் முழுவதுமாகச் சிந்திக்கிறது: ஆராய்கிறது. “நான் யார்?”-இது சிந்தனையின் முதற்படி,

கு..XII.12.