பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

171


அறிவே, ஞானம். அந்த அறிவுபெற, உயிர் செய்யும் முயற்சியே சிந்தனை-வழிபாடு! இதுவே திருவாசகப் பாடலின் கருத்து.

ஆக, உயிர் நாள்தோறும் சிந்தித்துத் தன் நிலைமையறிந்து கொள்ள முயற்சி செய்தலே வாழ்க்கையின் முதற்படி! இருக்கும் நிலை அறிந்தால்தான் இல்லாத நிலைமை அடைய முயலும் ஆர்வம் பிறக்கும். இந்தச் சிந்தனையில் மலர்வதே வழிபாடு!

“மக்கள் சிந்தனை” -15-8-80
கடவுளை ஏன் வழிபட வேண்டும்?

உயிர், கடவுளால் படைக்கப்பெற்றதன்று; கடவுளுக்கு அடிமையுமன்று. ஆனால், உயிரின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும் வகையில் கடவுள் தாய் போல்வான்; தலைவன் ஆவான்! உயிர் வளர, கடவுள் செய்யும் முதல் உதவி பொறி புலன்களை உயிர்களுக்கு வழங்குவதுதான்! நோயுற்ற நிலையில் முதல் உதவியால் செயற்கை மூச்சு ஏற்படுத்துவர் மருத்துவர்; செயற்கை முறையில் உயிர்ப்பு நிலை உணவு ஏற்றுவர். ஆயினும் உடல் அவைகளை ஏற்றுச் செரித்துக் கொண்டு, தானே மூச்சுவிட முடிந்தாலன்றிப் பிழைப்பு இல்லை. இதுபோலத்தான் உயிரியல் நிலையுமாகும். உயிர்க்குப் பொறி, புலன்கள் வழங்கப்பெற்ற நிலையில் உயிர் நினைந்து, வாழ்ந்து, துய்த்து, வளர்ந்து குறைகளினின்றும் விடுதலை பெற்று நிறைநலம் பெறுதல் வேண்டும். உயிரின் இந்த முயற்சிகளின் அளவுக்கும் தகுதிக்கும் ஏற்ப, கடவுள் உதவி அமையும்.

உயிர், கடவுளை ஏன் வழிபடுகிறது? பயத்தினாலா? இல்லை! “கடவுள் வழிபாடு பயத்திலிருந்து வந்தது” என்பது மேற்புல வழக்கு. “கடவுள் தன்னை வழிபடுவதற்காகவே படைத்தனன்” என்பது புறச்சமய வழக்கு! “கடவுளை வழிபட்டாகவேண்டும். இல்லையானால் நரகம் கிடைக்கும்” என்பது பிற சமயவழக்கு. தமிழ் வழக்கு, இவைகளுக்கு