பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முற்றிலும் வேறானது. “கடவுள் பேரறிவினன் வரம்பிலாற்றல் உடையவன்; நன்மையானவன்; இணையில் இன்ப வடிவினன். ஆதலால் கடவுளை வழிபடுவதன் மூலம் உயிர்கள் இந்த இயல்புகளைப் பெறலாம்; பெற வேண்டும்” என்பது தமிழ் வழக்கு!

வழிபடுதல் என்ற சொல் வழிப்படுதல் என்று பொருள்படும். அதாவது “கடவுள் நெறி நிற்றல்” என்பதாகும். கடவுள் வழிபாட்டில் எண்ணுதல், சிந்தித்தல் என்ற அகநிலைத் தொழிற்பாடே முதன்மையானது; பயன்தரத் தக்கது. இதற்குத் துணை செய்வனவாகச் சில சடங்குகள் அமைந்தன. ஆனால், காலப்போக்கில் சடங்குகளே விஞ்சி விட்டன! எண்ணுதல் இல்லை; சிந்தித்தல் இல்லை; அறிதல் இல்லை. அதனால் தெளிதலும் இல்லை. மண்ணில் வளரும் செடி செழித்து வளர, பூத்துக் குலுங்கக் கதிரொளி தேவை. இந்த ஒளிச் சேர்க்கை நுண்ணிய முறையில் பருஉருத் தோற்றங்களின்றி நிகழ்கின்றதல்லவா? அதுபோலத்தான் ஞானச் சேர்க்கை உயிர்க்கு ஏற்பட்டாகவேண்டும். அதற்கு உயிர், கடவுளைச் சிந்தித்தல் இன்றியமையாதது. இதையே வேறு வகையில் சொன்னால் எண்ணுதல் அவசியம். எண்ணங்கள் வழியது உயிர்களின் ஆக்கம் என்பது கொள்கை-கோட்பாடு! உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் இயல்பாகத் தோன்றுவதற்கு முன்பு, பாவித்தல் - அதாவது நடிப்பாகக்கூட இருக்கலாம் - பயனுடைய வாழ்க்கையாகிவிடும். ஆதலால் வழிபாடு சிறந்தது; உயர்ந்தது! தப்பாது பயன் தருவது!

கடவுளைச் சிந்தித்தல், அவனது பெயரை மந்திரமாக நெஞ்சத்திலிருத்தி எண்ணுதல்! மந்திரம் என்பது கூடச் சொல் அல்ல! பொருள் அல்ல. ஒலிக்கூட்டமும் அல்ல! பயன் தருவது! மந்திரத்தை எண்ணும் மனத்தின் வலிமையாலும், உறுதியாலும் அந்த மந்திரத்தை எண்ணும் பொழுது ஏற்படும் உணர்வுநிலையே பயன் தருவது. கடவுள் நெறி