பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உய்யும் நெறி

உயிர், உய்தலுக்குரியது; உய்யவேண்டிய நிலையில் இருக்கிறது. உய்தி பெறுவதற்காகவே வாழ்க்கை அமைந்தது. உய்தலாவது உயிர் குறைகளின்று விடுபடுதல்; நிறை நலம்பெறுதல்; அறியாமையினின்றும் நீங்குதல்; அறிவுநலம் பெறுதல், துன்பங்களின்று விடுபடுதல், இன்ப நலன்கள் பெறுதல், இன்ப அன்பு நிலையெய்துதல், உயிர்களின் தரம் பல. அதனால் உயிர்கள் வளர்ச்சியடையும் நெறிகளும் பல. நெறிகளுக்கேற்பக் காலங்களும் பிடிக்கலாம். உயிர் உய்யும் நெறி எதுவானாலும் அந்நெறிகள் அனைத்தும் உயிரின் செயற்பாடுகளையும் செயற்பாடுகளின் நோக்கங்களையும் மையமாகக் கொண்டதேயாம். உயிர், இயற்கையாக உழைப்புத் தன்மையுடையது.

உழைப்பு இருவகை. ஒன்று உடல் உழைப்பு. பிறிதொன்று அறிவுழைப்பு. இருவேறு நிலையினதாக உழைப்பு பிரித்து எண்ணப்பெற்றாலும் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானது, முற்றிலும் வேறுபட்டது அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாதது என்று கருதக்கூடாது. அளவு, பரிணாம வேறுபாடுதான் இரண்டும் தனித் தன்மையுடையதாக இருத்தல் கூடாது; இயலாது. ஒன்றையொன்று தழுவியதே! உழைப்பின் வாயிலாகக் கிடைக்கக் கூடிய நிலையான பாடங்கள் உடற்சார்புடையன அல்ல. எல்லாம் உயிர்க்கே! உழைப்பின் நோக்கம், தரம் தகுதி முதலியவற்றை மனத்தின் வாயிலாகப் புத்தியின் துணைகொண்டு, சித்தத்தில் சிந்தித்து முடிவு செய்வது உயிரே! பலர், பல சமயங்களில் புத்தி, சித்தம் இவைகளின் ஆய்வைக் கேளாமலே, மனநிலையிலேயே (மன நிலையில் கூட ஆழ்ந்த நிலையில் அல்ல) உடல், பொறிகள் வழிப்பட்ட உணர்ச்சி வேகங்கள் இயக்குகின்ற வழி செயற்படுவர். இச்செயல்கள் நூற்றுக்கு நூறு தன்னலச் சார்பினதாகவே