பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

175


அமைந்திருக்கும். அதுமட்டுமல்ல, வெட்கம், மானம் இவைகள் பற்றிக் கவலைப்படாத நிர்வாணத் தன்மையுடைய ஆசைகளாகவே அமைந்து கிடக்கும்.

இத்தகையோர் எதையும் ஆராயார்; யாரைப் பற்றியும் கவலைப்படார். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தேவை ஒன்று மட்டும்தான்! அத்தேவைகளைக் கூட அடையும் வாயில்களைப் பற்றியும் அவ்வாயில்களை அணுகும் முறையைப்பற்றியும் ஆராயார்: அறிந்து முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார். ஏன்? வாயில்கள் திறந்திருந்தாலும் கூட அவ்வழி அணுகார். நெறியல்லா நெறிகளையே மேற்கொள்வார். அதனால்தான். “மனம் போன போக்கில் போகவேண்டாம்” என்றனர். இன்று மனம் அழைத்துச் செல்லாமல்கூட தசை உணர்ச்சிகள் அழைத்துச் செல்லும் வழியில் செல்வோர் எண்ணிக்கை மிகுதி.

ஆதலால் உழைத்தால்மட்டும் போதாது. உழைத்தல் ஒருவகை அறிவியல்கலை, அருமைப் பாடுடைய கலை. மனம், புத்தி, சித்தம் இவற்றின் ஆற்றல் மிக்க தொழிற்பாடுகளை மானிட உயிர், உழைப்புக்குத் துணையாகக்கொண்டு அவ்வழியிலும் காலம், நியதி என்பனவற்றை அனுசரித்தும் உழைப்பவர்கள் வாழ்க்கை பாழ்படுவதில்லை. இத்தகு உழைப்பாளிகள் நன்கு வளர்வர். அவர்கள் ஒப்பற்ற சமுதாயத்தைக் காண்பர். சமுதாயத்தின் உறவு நெறிகளைச் செழிப்பாக வளர்த்துப் பாதுகாக்கும் காவலராகவும் விளங்குவர். இத்தகைய முறையான உழைப்பும் ஒருவகையில் தவமே! வழிபாட்டில் எண்ணும் சொல்லும் மந்திரங்களால் மட்டும் பயன் விளைவதில்லை. மந்திரங்களை எண்ணும் பொழுது மனம், புத்தி, சித்தம், உயிர் இவற்றின் உணர்வு நிலைத் தொழிற்பாடுகளே பயனளிப்பது. ஆதலால், உயிர் உய்யும் நெறி உழைத்தலேயாம். உழைப்பினால் வரும் உணர்வுகளே பண்பாடுகளாக வருகின்றன.