பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உழைத்தலின் மூலம் வரும் உணர்வுகளினால் பயன் விளைதலுக்கும் அதனை உரியவர் அனுபவித்தலுக்கும் நியதி-ஊழ் என்பது வழக்கு. ஊழ்த்தல்-ஊழ். ஊழ் என்பது புறத்தேயிருந்து வருவது அல்ல. அல்லது கடவுளோ யாரோ ஒருவர்மீது திணிப்பதும் அல்ல. அவரவர் ஊழுக்கு அவரவரே பொறுப்பு. “தீதும் நன்றும் பிறர் தர வாரா"; “அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்,” என்ற உரைகளை அறிக உழுது விதைத்தவன் அறுவடையின் பயனை அடைய வேண்டாமா? இத்தகைய உரிமையின்பாற்பட்டதே ஊழ்த் தத்துவம். நல்லவைகளை எல்லாம் கண்டு மகிழ்கிறவர்கள் துன்பங்களைக் கண்டு அல்லற்படுவதேன்? ஆனால், இன்பமும் துன்பமும் தொல்லைப்படுத்தும் நோக்குடையன அல்ல; மருத்துவ முறையேயாகும். ஆனால் மக்கள் இன்பத்தைப் பரிசுகளாக நினைந்து மகிழ்தலையும் துன்பங்களைத் தண்டனைகளாக நினைந்து வருந்துதலையும் காண்கிறோம். இன்னும் சிலர் ஊழ் மாற்றமுடியாதது என்கின்றனர். கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியாதா? எழுந்திருக்கக் கூடாதா? இது என்ன நியாயம்? கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியும்; எழுந்திருக்க வேண்டும்; இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள். ஆனால் ஒன்று கீழே விழுந்ததால் பட்ட அடி-வலி இருக்கத்தான் செய்யும் சிலமணிகள், சில நாட்களுக்கு! அதற்கும் மருத்துவம் செய்வர். அதுபோல் சென்ற காலத்தின் நிகழ்வுகளின் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அதுவும்கூட உணர்வில் குணத்தில்தான். ஊழ் உயிரைச் சார்ந்தது. வறுமைக்குக் காரணம் ஊழல்ல. அறிவறிந்த ஆள்வினையின்மைக்கு காரணம் ஊழல்ல. ஆதலால், உழைப்பு, உழைப்பின் பயன் என்ற வட்டம் ஓயாது இயங்குவது இயங்கவேண்டும். இந்த வட்டத்தைக் கோணலின்றிப் பயன் தரத்தக்க வகையில் இயக்கும் நல்லுணர்வுகள் தேவை!