பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


அடிகளாரின் ஆன்மிக, பொருளாதார, அரசியல் சிந்தனைகள் அனைத்துமே மனித மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்ட மனித நேயச் சிந்தனைகள். ‘தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெற்றியே, மானுட இயக்கத்திற்கு உயிர்ப்பு, உந்து சக்தி’ என எழுதிய அடிகளார். தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்து பெருமை பெற்றவர்.

‘ஒரு மனிதன் தனது பொறிப்புலன்களைப் பக்குவப்படுத்திப் பலருக்கும் பயன்பட வாழ்வதே சமய வாழ்க்கை’ என்று அவர் உறுதியாக நம்பினார். ‘மற்றவர்க்குப் பயன்படாதன எல்லாம் தற்சார்புடையன. அவையெல்லாம் காலப்போக்கில் அழியும். ஆகையால், மானுடத்தை முழுமையாக வளர்த்து. உயிர்க்குலத்துக்கு அர்ப்பணிப்பதே சமயத்தின் குறிக்கோள்’ என்று அவர் விரித்துரைத்தார்.

சமுதாயம் என்பது பலர் கூடி வாழும் ஒரு சமூக அமைப்பு, சமுதாய அமைப்பில் உள்ள ஒவ்வொருவருடைய ஆன்மாவும் செழித்து வளர்ந்தால்தான் சமுதாயம் செழிப்படையும். ஆதலால், சமயத்துக்கே அடிப்படை உறுப்பு சமுதாயம்தான். எனவே, சமுதாயத்தை வளர்ப்பது சமயத் தொண்டே என்பதை முற்றாக உணர்ந்து தெளிந்து, அதைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பிறருக்கும் அறிவுறுத்தியவர் அடிகளார்.

ஆகவேதான் அருள்நெறித் திருக்கூட்டமும் தெய்வீகப் பேரவையும் அமைத்து இந்து சமயத்துக்குப் பணியாற்றிய அடிகளார். திருவருட் பேரவையை அமைத்து, எல்லாச் சமயத்தினரும் இணைந்தும், இசைந்தும் வாழும் வகையில் தொண்டு புரிந்தார். தாம் ஒரு சமயத்தைச் சார்ந்தவராயினும், அச்சமயத் தலைவராயினும், பிற சமயங்களையும் மதித்துப் போற்றும் பண்பாளர் அடிகளார். ஆகவேதான், அடிகளாரை உண்மையான மனிதநேயச் செயல்பாட்டு வீரர் எனத் தமிழகம் போற்றிப் பெருமை கொள்கிறது.