பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முயற்சி செய்தது; முயற்சி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் பயன் மிகுதியல்ல. ஏன்? தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு என்று தனி விடுதிகள்தான் அமைத்தன. இம்முறையில் பரம்பரையாக வரும் குண ஆதிக்கங்களை உடைத்தெறியும் வாய்ப்புக் குறைவு. இதற்குப் பதிலாக இந்த மாணவர்களை வசதியும், வாய்ப்பும் உடைய வளர்ந்த சமுதாயத்தின் இளைஞர்கள் தங்கிப் படிக்கும் விடுதிகளிலேயே தங்கிப் படிக்க அனுமதித்திருந்தால் வளர்ச்சியின் விகிதம் கூடுதலாகி இருக்கும். ஆதலால், பரம்பரை காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ இருக்கும் இயற்கையிலமைந்த வேறுபாடுகளைப் பெரிதாக்கி வளர்த்து இலாபம் ஆக்க நினைப்பது சமுதாயக் குற்றம். வளர்ச்சி, பரிணாம நிலையில் அமைவது. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் துணையாக அமைந்து உதவி செய்தல் கடமை. இந்தக் கடமையிலிருந்து வழுவுகிறவர்கள் இயற்கை நியதிகள் இறைநெறிகளை மதிக்காது பிழை செய்கின்றனர்.

எந்த ஒரு தனி மனிதனின் அல்லது இனத்தின் அறிவாற்றலும் உழைப்புத் திறனும் அவர்களுடைய சொந்த முயற்சியால் மட்டுமே பெற்றதல்ல. அதனால் அவை அவர்களுக்கு மட்டுமே உரிமையுடையனவும் அல்ல. மனிதகுல நிகழ்வுகள்தாம் அறிவாற்றலுக்கும் ஆள்வினைத் திறனுக்கும் ஊற்றுக் கண். ஆதலால் அறிவும் ஆற்றலும் மனித குலத்துக்குப் பொது, அறிவு, ஆற்றல் துணைகொண்டு படைப்பனவும் பொதுவேயாம். மனிதனை அறிவுடையவனாக, ஆற்றலுடையவனாக வளர்த்தது மனிதகுல வரலாறு. இது உண்மை.

இந்த வரலாற்றுண்மையைத் தான் சமயம், உயிர் பல பிறப்புக்களால் வளர்ந்து வருகிறது என்கிறது. ஒவ்வொரு பிறப்பிலும் உயிர், சமுதாயத்தில் வாழ்ந்து தானே வளர்ந்து வருகிறது! உயிர்களை வளர்க்க எண்ணும் கடவுளும்கூட