பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

181



அன்பு உயிரியல்பான உணர்வு; ஒழுக்கம். அன்பு உயிரிடத்தில் பொங்கிவழிந்து மற்ற உயிரினங்களுக்குப் பாய்ந்து வளப்படுத்துவது. இத்தகைய தூய இயற்கையான அன்பை, வாழ்விக்கும் அன்பை-ஊற்றுக் கண்ணைத் தன்னல நயப்புக்களால் ஆணவச் செருக்குக்களால் தூர்த்து விட்டனர் பலர். அதனால், வீட்டிலும் டே... நாட்டிலும் போர்! உலக அரங்கிலும் போர்! ஏன் இந்த அவலநிலை? அன்பு, தன்னயப்புணர்வுகளால், விருப்பு வெறுப்புக்களால் எளிதில் திரிபடையக் கூடியது. இன்று மானிடச் சாதியின் வாழ்க்கை திரிபடைந்து கிடக்கிறது. அன்புக்கு உறவும் இல்லை, பகையும் இல்லை! அன்பு வளரும் நிலையில் கூடுதல், குறைவு அளவுப் பரிமாணங்கள் இருக்கும். ஆனால், அன்பு உலகத்தில் வேறுபாடு இல்லை; வெறுப்பு இல்லை; பகை இல்லை; குற்றம் இல்லை; குறை இல்லை; சிறிய வட்டங்களைக் கடந்து நிலையாக இருப்பதுதான் அன்பு.

அன்புடையராதல் எளிது. அன்புடையராய் விளங்க, உயிர் வாழ்க்கையின் குறிக்கோள், பயன் என்ன? என்று கண்டுகொள்ள வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள் குற்றங்களும் குறைகளும் உடையதாயிருக்கும். உயிர், அவற்றினின்றும் விலகி விடுதலை பெற்றுத் தகுதிகளைப் பெறுதலேயாம்! உயிரின் முழு நிலையான வளர்ந்த தகுதி, உயிர் அன்பாயமர்ந்திருத்தலேயாம். அவ்வன்பின்வழி திருவருளைத் துய்த்து இன்புறுதலேயாம். இந்த உயரிய இலட்சியத்தினையடைய அறிவு, ஆள்வினை, பொருள், பதவி எல்லாமே துணையாக அமைவனவேயாம். அன்பே இலட்சியம் என்று உணர்ந்தவுடன் அன்பினைத் தோற்றுவிக்க ஒரு நிலையான கருத்துத் தேவை! கடவுள் ஒருவர்! அவர் உலகத்தின் தந்தை—தாய்! உயிர்க்குலமனைத்தும் அவர்தம் அருளுக்குரியன என்ற அடிப்படைக் கருத்தை எண்ணினால் தோற்றநிலையிலும் வாழ்க்கை நிலையிலும் இறுதி நிலையிலும் ஓர் குலம் என்ற உணர்வு தோன்றும்!