பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அந்த உணர்வு அன்பினைத் தூண்டும்! அன்புக்கு நாடு, இனம், மொழி ஆகிய எந்த வேறுபாடும் இல்லை. வேறுபாடுகள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருந்தால் அவை அன்பைத் தடைசெய்யும். குற்றம் குறைகள் கூட அன்புக்குத் தடையாக அமையா; அமையக்கூடா. துர்நாற்றமான மலம்கூட முறையாகப் பக்குவப்படுத்தப்பட்டால் நல்ல உரமாகிவிடுகிறதே! மீண்டும் நமக்குரிய உணவைப் பெற அந்த உரம்தானே துணைசெய்கிறது? அழுக்கு வேட்டியின்மீது கோபம் கொள்வார் யார்? அழுக்கு வேட்டியின்மீது கோபம் கொண்டு அதைக் கிழிப்பவர்கள் யாரையாவது பார்த்திருக்கிறார்களா? இல்லை! கிழிந்த வேட்டியைக்கூட வேறுவகையாக உபயோகிக்கும் மனிதர்களையே பார்க்கிறோம். அதுபோல் குற்றங் குறைகளுடைய வர்களையும்கூட அன்பாகப் பழகித் திருத்திப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, வேற்றுமை பாராட்டக்கூடாது; வெறுப்பும் கொள்ளக் கூடாது. ஒரு குணம் அதனை ஒத்த குணத்தையே எதிர்த் திசையிலும் தோற்றுவித்து வளர்க்கும். ஆனாலும் அன்பு நெஞ்சமுடையார் சிலர். அன்பை ஒளித்து வைத்துக்கொண்டு குற்றம் குறையுடையாரைத் திருத்தி எடுத்து வளர்க்க முயற்சிசெய்வர். இத்தகு சூழ்நிலைகளில் நம்பிக்கையும் நல்லெண்ணமுமே துணைசெய்ய இயலும். அன்பில், உறவில் அவநம்பிக்கையும் பரபரப்பும் கூடவே கூடாது!

உயிர்க்குலத்தை, மானிடச் சாதியை அன்பில் நனைத்து வளர்க்கவே சமயம் தோன்றியது. அன்பே சிவம் என்று திருமந்திரம் கூறும்.

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமான தாரும் அறிகிலார்”

(திருமந்திரம் 370)