பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று கூறுவான். வைணவ சமயத்தைச் சார்ந்தவனைக் கேட்டால் திருமால் என்று கூறுவான்.

ஆனால், சைவனாகவோ, வைணவனாகவோ, வாழாமல் இந்துவாக வாழ்பவனிடம் அவன் வழிபடும் கடவுள் பேர் கேட்டால் ஒரு கடவுள் பெயரைச் சொல்ல அவனுக்குத்தெரியாது. பல கடவுள் வழிபாட்டுணர்ச்சியே இந்து என்ற உணர்ச்சியிலிருந்துதான் வருகிறது. ஒரு சைவனை நோக்கி உன் ஆச்சாரியர் யார்? என்று கேட்டால் மெய்கண்டார் என்று சொல்லுவான். அதுபோலவே ஒரு வைணவனைக் கேட்டால் இராமாநுசர் என்று சொல்லுவான். இந்து சமயம் என்று கூறுபவர்களைக் கேட்டால் ஆதிசங்கரர் என்று சொல்ல வைக்கிறார்கள். இந்திய மண்ணில் பிறந்த ஞானிகள் மட்டும் அல்ல, உலக அரங்கில் தோன்றிய எந்தவொரு ஞானியையும் நாம் போற்றக் கடமைப்பட்டுள்ளோம். ஞானத்திற்கு நாட்டு எல்லையும் மொழி எல்லையும் கால எல்லையும் கிடையாது. வரம்புகளைக் கடந்ததுதான் ஞானம். ஆனால் உரிய வளர்ச்சியடைகின்ற வரையில் எது சிறந்தது என்று அனுபவத்தில் வைத்து அறியத்தக்க வகையில் உலகத்தின் தத்துவ நெறிகள் எல்லாம் உலகத்தின் வற்றாத புனலுடைய பல ஆறுகளைப் போலச் செழித்து வளரவேண்டும். அவைகளின் அனுபவங்கள் உலக மக்களுக்கெல்லாம் உரிமையாக வேண்டும்.

இதில் நமக்கு இரண்டு விதமான கருத்து இல்லை. ஆயினும் சிந்தையில் மலர்ந்து நிற்க வேண்டிய ஒரு நெறியை, ஆதிக்கத்தின் மூலமும் மற்ற நெறிகளின் குரல்வளைகளை நெரிப்பதன் மூலமும் ஒன்றை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கும் போதுதான் சிக்கல் தோன்றுகிறது. 1955-இல் நாம் மலேயா சுற்றுப்பயணத்திலிருந்தபொழுது “நாம் ஓர் இந்து அல்ல” என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருந்தோம். அச்செய்தியை அறிந்த சென்னை இந்து