பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தியன் என்ற நாட்டு அடிப்படையின்றி இனம் மொழி, மத அடிப்படையில் ஒருமைப்பாடுடையவராகச் செய்தல் அரிது என்பதே நமது கருத்து.

முதலில் இன்றுள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டுமானால் இந்து மதம் என்ற அமைப்புக்குள் மதத் தலைவர்களுக்குள்ள ஆதிபத்திய உணர்வு நீங்கி அவர்களின் தனித் தன்மைக்கு இடையூறில்லாமல் ஒருங்கிணைக்க முயற்சி செய்யவேண்டும். இது அவ்வளவு எளிதாக நடைபெறும் என்று நாம் கருதவில்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் பார்ப்பனர் சார்புடையவர்கள் ஆகியோர் தங்களைத் தனித்து ஒதுக்கி அமைத்துக்கொள்வதற்கே முயற்சி செய்கின்றனர். தங்களோடு முற்றிலும் உடன்பட்டுவராதவர்களை ஒதுக்கவே முயல்கின்றனர். நாம் பேரவைத் தலைவராக இருந்தபொழுது பேரவையின் கொள்கைகளில் முற்றாக உடன்பாடில்லாத இந்து சமய அமைப்புகளாயிருந்த பல்வேறு அமைப்புக்களின் பேராளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்தோம். பொதுப் பிரச்சனைகளில் அவர்களை அடிக்கடி கூட்டி ஆலோசனைகள் கேட்டோம். அவர்களுடைய இயக்கங்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்தோம். ஆனால் பேரவைக்கு இடுக்கண் ஏற்பட்டபோது அந்த இயக்கங்களில் ஒன்றுகூட வாய்திறக்கவில்லை. இன்றுள்ள சூழ்நிலையிலும்கூட இந்த மதமாற்றச் சிக்கல்களில் ஈடுபட்டும் எவரையும்விட நாம் காலத்தில் அக்கறை காட்டியிருக்கிறோம். திருநெல்வேலி - நைனாகரம் சிற்றுாரில் முஸ்லீம் மத மாற்றத்தை நேரில் சென்று தடுக்க முயற்சி செய்தோம். ஓரளவு வெற்றி கிடைத்தது. போடிநாயக்கனூரில் - லெட்சுமிபுரம் முஸ்லீம் மதமாற்றத்தைத் தடுத்து நாம் நிறுத்தியதோடு ஆங்கு வழிபாட்டுக் கோயில் இல்லாமலிருந்ததால் நாம் ஆதீனத்தின் சார்பில் நிதி உதவி செய்து கோயில் கட்டித் தரவும் செய்தோம்.