பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அலையாக வளர்வதைத் தவிர்க்கவேண்டும். இப்படிச் சொல்வதால் மதம் மாறிச் செல்வதைப்பற்றி நமக்குக் கவலையில்லை என்று பொருளில்லை. நம்முடன் பிறந்த இந்து அரிசனச் சகோதரனை நாம் எளிதில் இழக்க தயாராக இல்லை. ஆயினும் மதம் மாறிச் செல்லும் நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்தி, அங்கு முற்றுகையிடுவது விரும்பத்தக்கதல்ல. அதற்கு மாறாக மதமாற்றத்துக்குச் செல்லுமளவுக்கு இந்து அரிசனங்களைத் துண்டும் காரணங்களை மாற்ற உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதனை விடுத்து மாநாடுகள் நடத்துதல் மாநாடுகளில் இன வகுப்புக் கலவரங்கள் ஏற்படத்தக்க வகையில் கடுமையாகப் பேசுதல், முஸ்லிம் சமுகத்தினரைப் போருக்கு அழைத்தல் ஆகியவை உணர்ச்சிகளைத் தூண்டப் பயன்படலாம். ஆனால் உருப்படியான செயலைத் தூண்டாது; பயன்தராது;

இந்து சமூகத்தின் எல்லாச் சமூகப் பிரிவினரும் சாதி வேற்றுமைகளை அடியோடு அகற்ற- மறந்துவிட, முன்வர வேண்டும். சாதாரணமாகப் பிரிவினைகள் வழிப்பட்ட சமூக அமைப்பில் நன்மை தீமைகள் நிகழும்பொழுது, அவற்றிற்குக் காரணமானவர்களின் தகுதி, திறமை, வளர்ச்சி ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெறாமல் சாதி உணர்வே முன் தலைதூக்கியது. இது சமுதாய அமைப்பிற்கு நன்றன்று. குறிப்பாகத் தீண்டாமையை அறவே விலக்க உறுதியெடுக்கவேண்டும். சமுதாய அமைப்பில் தீண்டாமை என்பது ஒரு கொடிய புற்றுநோய். இந்நோயால் சமூக அமைப்பில் இருபால் தழுவிய நல்லெண்ணங்கள், நம்பிக்கைகள் கெட்டுப்போகின்றன. அவ்வழி ஆக்கமும் ஆற்றலும் அழிகின்றன. இதனை நன்குணர்ந்து தம்முடைய இந்து சமூகத்தினர் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் அகத்திலும் புறத்திலும் தீண்டாமையை அறவே அகற்றவேண்டும்.