பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ள எந்தவொரு மத நிறுவனத்தாலும் தனித்தனியே இயலாது. அதனால் திருமடங்களின் தலைவர்கள் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆகியவர்களின் ஒருங்கிணைப்புக் கொண்ட பேரவை தோன்றியது. ஆனால் அதன் வளர்ச்சியில் போதிய ஆர்வம் காட்ட மதத் தலைவர்கள் முன்வரவில்லை. ஆயினும் மக்கள் அளவுகடந்த ஆர்வம் காட்டினார்கள். இயக்கம் வளர்ந்தது. ஆனால் சாதி வெறி பிடித்தவர்கள் நெருக்கடி காலத்தில் மறைவாகச் சதிசெய்து அதை முடக்கிவிட்டார்கள். அதன்பின் பேரவை சரியாக வராது என்ற எண்ணத்துடனேயே உழுவலன்பிலும் கெழுதகை நட்பிலும் நமக்குச் சிறந்தவர்களாக விளங்கும் பேரூராதினத் தலைவர் சிரவையாதீனத் தலைவர் குன்னூர் சற்குரு ஆசிரமத் தலைவர் ஆகியோரையும் இன்னும் சிலரையும் கொண்டு திருமடங்கள் அவையம் காணப் பெற்றது. இந்த அமைப்பைக் கண்ட நோக்கத்திற்கிசைய அதை இயக்க முடியவில்லை. அண்மைக் காலமாகக் குன்னூரடிகள் இயக்கும் முயற்சியில் துடிப்போடு ஈடுபட்டுள்ளார்கள். ஆயினும் செய்யவேண்டிய பணிகளை நோக்கின் இது போதாது. திருமடங்கள் அவையத்தைத் திறம்பட இயக்க நம்முடைய கெழுதகை அடிகள் பெருமக்கள் தியாகம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை. இங்ஙனம் நாம் சொல்வதற்குக் காரணம் அவர்களின் பணிச்சுமையே அவையும் செயல்படாமல் போனதற்குக் காரணமாகும் என்பதற்காகவே! இனியும் பணிச்சுமை என்று கருதி வாளாஇருத்தல் இயலாது. பேரவையையும் புதுப்பித்து மக்கள் இயக்கமாக நடத்தவேண்டும்.

பேரவையைப் புதுப்பித்து இயக்கத் தருமபுரம் ஆதீனம் காட்டும் ஆர்வம் வரவேற்கத்தக்கது! பாராட்டத்தக்கது; திருமடங்கள் அவையம் முழுநேரத் தொண்டர் அணி அமைத்து ஆழமான-ஆக்கரீதியான நிர்மாணப் பணிகளை