பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிறப்புத் திட்டங்கள் தயாரித்துச் செயற்படுத்த வேண்டும். இப்பணியைக் கிராமங்களில் கூட்டுறவு மூலம் செய்வது வேற்றுமையற்ற பேதமற்ற ஒரு சோசலிச சமுதாய அமைப்புக்குத் துணையாக இருக்கும். இத்துறையில் மாநில அரசும் நடுவண் அரசும் போதிய கவனம் செலுத்துதல் நல்ல பயனைத் தரும்.

அடுத்து, பல திருமண உரிமை, வருமான வரிச்சலுகை, திருமண விலக்கு உரிமை, கல்வி நிறுவனங்கள் நடத்துதல் ஆகிய பல துறைகளில் இன்னும் நாட்டுக்குப் பொதுச் சட்டங்கள் உருவாகவில்லை. சமூக விதிகளும் காலத்தின் மாற்றங்களையும் தேவைகளையும் அனுசரித்ததாக இல்லை. இந்தச் சலுகைகளும் மத மாற்றங்களைத் தூண்டிவிடும் சக்திகளாக விளங்குகின்றன. இந்திய நாட்டு அனைத்து மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம் உருவாக்க வேண்டிய அவசியத்தை நடுவணரசு ஆராய்ந்து ஒரே சிவில் சட்டம் இயற்ற முன்வரவேண்டும்.

பொதுக்கல்வி நிறுவனங்களை நடத்துதல் ஒரு சமுதாயப்பணி. இதில் இந்துக்களுக்கு ஒரு விதியும் பிற சமயத்தினருக்கு ஒரு விதியும் இருப்பது நெறிமாறானது; அரசியல் சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்னும் பொதுக் கொள்கைக்கு முரணானது. கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் தங்களுடைய மதக் கலாச்சாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நடத்தும் எந்த நிறுவனத்திற்கும் அரசு விதிவிலக்குத் தரலாம்; மான்யங்கள் தரலாம். அதில் ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் எல்லாரும் படிக்கக்கூடிய-எல்லாருக்கும் உரிமையான பொதுக் கல்வித் திட்டத்தில் ஏன் பாரபட்சங்கள்? இந்தப் பாரபட்சங்களை உடனடியாக நீக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்த முன்வருவார்கள்.