பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

207


சமூகத் தகுதி அல்லது சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை என்பது. இதில் உண்மை இல்லாமல் போய்விடவில்லை. இந்து சமூகத்தில் இருக்கும் இந்தத் தீண்டாமையை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறோம். ஆனால் இதைக் காரணமாகக் காட்டுகிற தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக இந்தத் துறையில் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தை அன்புகூர்ந்து கணித்துப் பார்க்கவேண்டும். முப்பத்து நான்கு ஆண்டுகளில் தீண்டாமை ஒழிப்பில் இந்த நாடு மிகப்பெரிய சாதனையைச் செய்திருக்கிறது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் சட்டமன்றங்களில் பல்வேறு பொறுப்புக்களில் தகுதிவாய்ந்த பதவிகளில் இன்றைக்கு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சமூக அந்தஸ்து அல்லது சமூகத் தகுதி அரசியல் நிலையிலும் சமுதாய நிலையிலும் வழங்கப் பெற்றிருக்கிறது; வழங்கப்பெற்றிருக்கிற உரிமைகள் போதவில்லையென்று சொன்னால் நியாயம் உண்டு. ஆனால் இதைவிடக் கடுமையான தீண்டாமையில் தொல்லைப்பட்ட காலத்திலெல்லாம் மதம் மாறாமல் இப்பொழுது, ஏதோ தற்செயலாக நிகழ்கின்ற சில சம்பவங்களைக் காரணம் காட்டிச் சமூகத் தகுதி இல்லையென்று சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என்பது நம்முடைய கருத்து. ஆனாலும் இந்து சமூகத்தைச் சேர்ந்த மேட்டுக் குடியினர் தீண்டாமையை முற்றாக ஒழிக்கவும், இந்து சமூகத்திலிருக்கிற கடை கோடி மனிதனுக்கும் நல்ல வாழ்க்கை நல்ல சமூகத் தகுதி கிடைக்கவும் உத்தரவாதம் அமையும்படி பார்த்துக் கொள்வது நீங்காத கடமையென்றே நாம் கருதுகின்றோம்.

இந்து சமூகம் எவ்வளவு சீக்கிரத்தில் தீண்டாமைக்கும் சாதி வேற்றுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறதோ அந்த அளவுக்கு அஃது உயிர்ப்போடு ஆர்ப்பரித்து எழும்; புதிய பொலிவோடு விளங்கும் என்பது நம்முடைய நம்பிக்கை.

நம்முடைய நாடு. சமயச் சார்பற்ற அரசு நிலவுகின்ற ஒரு நாடு. அதாவது எந்த ஒரு மதத்தையும் அரசு