பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சார்ந்திருக்காது என்பது இதன் கொள்கை. அப்படியிருந்தும் ஒவ்வொரு மதத்திற்கும் அல்லது சமயத்திற்கும் அந்தந்தச் சமயத்தைச் சார்ந்த மக்களை வழி நடத்தத் தனித்தனி மதச் சட்டங்களையே நடைமுறைப்படுத்துகிறது. இந்த நடைமுறையின் மூலமாக வாழ்க்கை உரிமைகளில் பலவகை வேறுபாடுகள் இருப்பதும் மதமாற்றத் தூண்டுதலுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. உண்மையான சமயச் சார்பற்ற அரசுத் தன்மைக்கு இலக்கணமாக எல்லாச் சமயத்தைச் சார்ந்த மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரே விதமான பாங்கு நிலவும்படி ஒரே விதமான உரிமையில் சட்டத்தைச் செய்வது நல்லதா என்பதை இந்தத் தருணத்தில் அரசியல் தலைவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்.

எல்லாவற்றிற்கும் மேலாக முப்பத்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் கடைகோடியில் வாழும் மக்களுக்குப்போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தீண்டாமையை உயர் சாதியினர்தான் நீக்கவேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளின் கொள்கை, காரணம் ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் தங்களுடைய உரிமைகளுக்குத் தாங்களே போராடினால் அது ஒரு விதமான காழ்ப்பாக உருமாற்றம் பெறும் என்பது அண்ணல் காந்தியடிகளின் கருத்து. எனவே, தாழ்த்தப்பட்ட மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களை உயர்த்துவதும் உயர் குடியினர் செய்யவேண்டிய பணியென்று வலியுறுத்தினார். ஆனால், அண்மைக் காலமாக நம்முடைய நாட்டின் நடைமுறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்களுக்காகத் தாங்களே போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டனர். இஃதொரு பெரிய தீமை.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடத்திலும் கூட, தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நீண்ட நெடுங்காலத்திற்கு இருந்தால்தான் இந்தச் சலுகைகளைப் பெறமுடியும் என்ற