பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

209


ஒரு பொய்மையான நம்பிக்கை கூடக் கால்கொண்டு வருகிறது. இவைகளை நாம் நீக்கியாகவேண்டும். எனவே குறிப்பிட்ட கால எல்லைக்குள் நம்முடைய இந்து சமூகத்தைச் சேர்ந்த மதத்தலைவர்கள், திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் தீண்டாமையை முற்றாக நீக்கி, இந்து சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினருக்கும் எல்லா உரிமைகளையும் ஒப்ப வழங்குகிற ஒரு புதிய சமுதாயத்தைக் கண்டேயாகவேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, திருமூலர் கண்ட “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற உயரிய கொள்கை நம்முடைய வாழ்க்கையில் சட்டமாக இடம் பெறவேண்டும். அந்த முறையை நாம் என்றைக்கு நடைமுறைப் படுத்துகிறோமோ அன்றைக்குத்தான் மத மாற்றங்கள் நிகழாலிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்து சமூகத்தைப் பொறுத்தவரையில் அது மக்களிடம் சென்று அவர்களை அனைத்து அழைத்து வருகிற செயல் திட்டங்களை இன்றும் ஏற்றுக்கொள்ளாதது பெரிய குறை.

மாணிக்கவாசகருக்கு அருளை வழங்கிய பிறகு, இறைவன் தம்மைப் பின் தொடர்ந்து வந்து பாதுகாப்பதாக மாணிக்கவாசகர் தாம் அருளிச் செய்த திருவாசகத்தில் பாடியுள்ளார்.

“பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே! சிவபெருமானே!”

என்பது திருவாசகம்.