பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அலை வீசுகிறது. ஆனால் நிச்சயமாக அது தடுத்து நிறுத்தப்படும். நம்முடைய மக்கள் இங்கே எல்லாவிதமான உரிமைகளையும் பெறுவர் என்ற உத்தரவாதத்தை நாம் தைரியமாகக் கூறிக் கொள்கிறோம். அவர்கள் பிறந்த சமயத்தில் வாழ்ந்து வளர்ந்து எல்லா உரிமைகளும் பெற்று அவர்கள் மகிழவேண்டுமென்பது நம்முடைய வேண்டுகோள். அந்த நல்லெண்ணத்தை அவர்களுக்கு வழங்குமாறு எல்லாவல்ல இறைவனை - வழிபடும் தெய்வத்தை இறைஞ்சுகின்றோம்.

-"மக்கள் சிந்தனை” 1-11-81


மதங்களின் இலட்சியம்

“எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்”

என்பது பாரதியார் வாக்கு. இந்திய நாகரிகம் சமயப் பொறைக்கும், சமயச் சார்பற்ற தன்மைக்கும் அடிப்படை கண்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவதரித்த மாணிக்கவாசகர்,

“தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!”

என்று அருளினார்.

அண்ணல் காந்தியடிகள் மதச்சார்பற்ற தன்மையுடைய ஒரு சிறந்த இந்துவாகவே விளங்கினார். இத்தகைய நாட்டில் இன்று பரவலாக மதக் கலவரங்களும் சாதிக்கலவரங்களும் நடப்பது வருத்தத்தைத் தரக்கூடியன. இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. மொழியும் மதமும் உணர்ச்சியைத் தொடக்கூடியன. எளிதில் கலவரத்தைச் செய்யக்கூடிய உணர்வைத் தூண்டக்கூடியன. இதில் மக்கள் கவனமாக இல்லாதுபோனால் பெரிய கேடுகள் விளையும். நாடு வலிமை இழக்கும்.