பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடவுள் இல்லை. ஓடிவிட்டார் என்று கூறிப் பல ஆண்டுகள் ஆதிதிராவிடர்கள் நுழைந்த கோயிலுக்குச் செல்லாத பெரியவர்களை இந்த நாடு மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. ஆதிதிராவிடர்கள் நுழைந்ததால் மதுரை மீனாட்சி கோயிலிலிருந்து வெளியேறி வந்துவிட்டாள் என்றுகூறி மதுரையில் ஒரு பார்ப்பனர் வீட்டிலேயே மீனாட்சி படத்தை வைத்து வழிபட்டார்கள். இதுமட்டுமா? ஆயிரக்கணக் கானவர்களுக்குக் கல்வியையும் ஞானத்தையும் தந்த கடவுளை நம்புவதாக நடிப்பவர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சமா? கடவுளை நம்புவதாக நடிப்பு? கடவுள் எல்லோருக்கும் வைத்த ஞானத்தை, இந்த மனிதப் புரோகிதர்கள் - நடமாடுந் தெய்வங்கள் - மண்ணுலகக் கடவுளர்கள் நாட்டுத் தேவர்கள் தட்டிப் பறித்த கொடுமையை எடுத்துக் கூற வார்த்தைகள் ஏது? சுதந்திர அரசாங்கம் வந்தே கல்வி கிடைத்தது. வேலை வாய்ப்பு உண்டா? வேலைவாய்ப்பெல்லாம் மேட்டுக் குடியினரின் ஏகபோகமாக இருந்தது. அண்ணல் காந்தியடிகளும் அம்பேத்காரும் தந்தை பெரியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கைப் போராட்டத்தின் வழியாக வந்த பலன் தானே இன்று, தாழ்த்தப்பட்ட மக்கள்- பிற்படுத்தப் பட்ட மக்கள் அனுபவிக்கும் பட்டம், பதவிகள்!

“கடவுள் உலகிற்குப் பொதுவானவர்; உலகிற்கு அம்மையப்பர் அன்பே வடிவமாக இருப்பவர்-என்றெல்லாம் பஜனை செய்யும் மதத் தலைவர்கள்-உபதேசிகள் ஏன் இந்த உரிமைகளை மதத்தின் பெயரால் மக்களுக்கு வழங்கவில்லை: இந்த ஏமாற்றுகள்தாமே அல்லது நீதிப் பிறழ்வுகள் தாமே சமுதாயத்தின் ஒரு பகுதியில் கடவுள் இருந்தால் இந்தச் சதிகள் நடக்குமா? என்ற கேள்விக்கு, இடம் தந்தன! சமயத் தலைவர்கள் விடை தந்திருந்தால் திராவிடர் கழகம் நாத்திக இயக்கமாக வளர்ந்திருக்காது. இந்த நாட்டில் கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் இடம் பெற்றிருக்காது.