பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மதம் அல்ல. திராவிடர் கழகத்தினரும் பொதுவுடைமை இயக்கத்தினரும்கூட எதிரிகளாகமாட்டார்கள். மதங்களின் வளர்ச்சியைக் கெடுக்கும் களைகளாகிய சாதிகுல வேற்றுமைப் பிரிவுகள், இன ஒதுக்கல் கொள்கைகள், உடையார்-இல்லார் என்ற வேற்றுமைகள் இவைகளை எதிர்த்து மதங்கள் போராடுவதே மதப்பற்றாகும்! வறுமை ஏழ்மையிலிருந்து மீட்கப் போராடுவதே மதவளர்ச்சிக்குரிய பணியாகும். இந்தியா முழுவதும் பரவலாக உள்ள மதத் தலைவர்கள் மதப் புரோகிதர்கள், சந்நியாசிகள், மத போதகர்கள் மதப் பிரசாரகர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட்டால் இந்தியா வளர்ந்துவிடும்! ஆனால், மனம் வரவேண்டுமே!

—மக்கள் சிந்தனை 15-2-83


இந்திய சமயங்களின் மையம்

இந்திய நாடு சமயச் சார்பற்ற நாடு. அதே போழ்தில் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு. இந்திய நாகரிகத்தில் விழுமியது வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது. இத்தகைய சிறந்த நாகரிகம் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. ஆனால் இது பழைய வரலாறு. இன்று இந்தியாமொழி, இனம், சாதி, சமயங்களால் அலைக்கழிவு செய்யப்படுகின்றது. படித்தவர்கள் என்று நம்பப்படு கிறவர்கள்கூட இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். திருவள்ளுவர், திருவருட் பிரகாச வள்ளலார் ஆகிய அருளாளர்கள் ஒருமைப்பாட்டினைத் தவம்போல ஏற்று இனிய அருள் மொழிகளைத் தந்துள்ளனர். இன்று அவர்களைப் பின்பற்றுவோரில் கூட பலர் இந்தப் பேரபாயத்தில் சிக்கியுள்ளனர். இஃது இந்திய நாட்டுக்கு நல்லதல்ல. சாதிமதச் சண்டைகளைத் தவிர்த்து இந்திய ஒருமைப்பாட்டை வளர்த்து இந்தியாவை வலிமைப்படுத்த வேண்டும். இஃது உடனடியாகச் செய்யவேண்டிய கடமை.