பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

225


உயிர்களின் தோற்றம் இயக்கம் முதலியன பற்றியே ஆராய்கிறார்கள். இயற்பியல் ஆய்வு அளவுடன் மனித உயிரியல் நின்றுவிடுவதில்லை; மனிதம் ஓர் அறிவுப் பொருள்; உணர்வுப் பொருள். ஆம் ஆன்மா என்பது உயிர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு உரிய வடமொழிச் சொல். ஆன்மிகம்ஆன்மாவின் தரம்-பண்பு என்பது பொருள். இந்த உலக இயக்கம் ஐம்பூதங்கள் வழி இயங்குகிறது; இயக்கப்படுகிறது. இது அறிவியல் உண்மை. ஆனால் இந்த இயக்கம் இடையீடின்றித் தொடர்ச்சியாக இயங்கவும் நிலைபெறவும் பண்பாடு காரணமாக அமைகிறது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்று திருக்குறள் கூறும். ஆன்மிகம் என்பது ஆன்மாவை-உயிரை சால்பின் பண்பில் வளர்த்தல் என்பது. கடவுள் உயர்வற உயர்ந்த நலமாகும். கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது! கடவுள் நன்றுடை யான்; இன்பமுடையான், ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த அன்பு, இன்ப அன்பு, கடவுள் உண்மை; வாலறிவு: கடவுள் இறவாத இன்ப அன்பு. இத்தகு இயல்புகள் மிக்குடைய கடவுட் பொருளோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆன்மிகம். அந்தக் கடவுள் இயல்புகளைச் சால்புகளைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளும் செயல்முறை வழிபாடு.

ஆன்மா பிழைத்தல் கூடாது; வாழ்தல் வேண்டும். இன்று மனிதர்கள் வாழவில்லை. “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்பார் மாணிக்கவாசகர். வாழ்தலே மனித வளத்தின் அடையாளம். மனிதவளம் பொறிகளில் மட்டும் அமைந்தது அன்று; புலன்களில் அமைந்து பொறிகள் வாயிலாக இயங்குவது. புலன்கள் அறிவுக் கருவிகள். இப்புலன்களில் மிகச் சிறந்த சிந்தனை எதனைச் சார்ந்திருக்கிறதோ அதனைச் சார்ந்து வாழ்வு அமைகிறது. சிந்தனை பொறிகளின் ஆற்றலுக்கடங்கி விடுமாயின் ஆன்மா வாழ்வை இழக்கிறது. மாந்தரில் பலர் உண்பர். உறங்குவர். இனவிருத்தி