பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்வர். இத்தகையோர் ஆன்மாவை இழந்து இழிபிறவிகளாகி அழிவர். சித்தம் ஆன்மாவின் ஆளுகையிலும் ஆன்மா இறைவனின் ஆளுகையிலும் அடங்கி இருப்பின் வாழ்வு சிறக்கும். ஆன்மா வளரும்; ஆன்மாவின் தரம் உயரும். இத்தகு வாழ்வே வாழ்வாங்கு வாழ்தல்.

ஆன்மாவிற்கு வாய்த்த அகநிலை அறிவுக் கருவிகள் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் ஆகியன. இவற்றுள் இன்று பலர் மனத்தை மட்டுமே அறிந்துள்ளனர்; மனம் பற்றி மட்டுமே பேசுகின்றனர். மனம் என்பது ஒரு சாதாரணக் கருவியேயாம். மனம் செய்திகளை எளிதில் பற்றிக் கொள்ளும் தன்மையது. ஆனால் எதைப் பற்றலாம் ? எதைப்பற்றக் கூடாது? என்ற அறிவு ஆன்மாவுக்கு இல்லை. மனம் எதையும் பற்றும்; மனத்தினாலேயே பலர் வாழ்க்கை பாழ்படுகிறது. அதனாலேயே தமிழ் மூதாட்டி மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்றார். மனம் பற்றும் செய்திகளை, புத்தியினிடத்தில் ஒப்படைத்து நன்று-தீது கண்டறிந்து ஏற்பது புத்தி, புத்தியாலும் கண்டறிய இயலாத செய்திகளைச் சித்தம் ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளும். சித்தம் செய்த முடிவைச் செயற்படுத்துதல் அகங்காரமாகும். இதுவே ஆன்மாவின் இயக்கமுறை. மனதை மட்டும் மையமாகக் கொண்டு வாழும் மாந்தார்கள், புத்தியைப் பயன்படுத்திவாழ்வார்கள். சித்தத்தைப் பயன்படுத்தி வாழ்பவர்கள் வளர்ந்தவர்கள்-உயர்ந்தவர்கள். சித்தத்தைத் தமது ஆளுகையில் வைத்துக் கடவுளின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள் வளர்ந்த மனிதர்கள்; உயர்ந்தவர்கள்; பெருந்தகையாளர்கள்.

ஆன்மிகப் பண்புகள் இயல்பாகவே வாரா. ஆன்மிகம் ஒரு சிறந்த அறிவியல்; ஆன்மிகத்தின் முதற்படி தன்னையறிதல். அதாவது தனது குறை நிறைகளை அறிதல், பெற்றிருப்பதும் பெறாததும் அறிதல்; பெறத்தக்கனவற்றை அறிந்து, அடைய-பெற முயற்சி செய்தல். ஆன்மிகம்