பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஆன்மிகச் சிந்தனையையும் இணைத்துக் கூறியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது. இறைவன் கொற்றாளாய் மண் சுமந்தான். அவன் பொன்மேனி புண் சுமந்தது. யாருக்குக் கூலியாளாய் இறைவன் தன்னை அமர்த்திக் கொள்கின்றான்? ஓர் ஏழை வந்திக் கிழவிக்குத் தன்னைக் கூலியாளாக அமர்த்திக் கொள்கின்றான். பெறுகின்ற கூலியோ வெறும் உதிர்ந்த பிட்டு “உழைப்புக்கு உணவு” என்ற தத்துவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை இறைவன் தரவில்லை. அதற்காகத் தண்டனையும் பெற்றுக் கொள்கின்றான். இது எதை நமக்குக் காட்டுகிறது? பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை யார் தர மறுத்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அவன் ஆண்டவனாய் இருந்தாலும் தண்டிக்கப்படுவான் என்ற அற்புதக் கருத்தைத்தான் இந்தக் திருக்கூத்து நமக்கு உணர்த்துகின்றது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பொதுவுடைமைச் சிந்தனையே நம் ஆன்மிக உலகம் என்பதைச் சிறப்பாக, புதிய பார்வையில் கூறி இருப்பது பாராட்டுக்குரியது.

அருள்நெறித் தந்தையின் கவிதைகள்: ஞானத் தந்தைக்கு உணர்வுகள் எழும்போது எல்லாம் தமிழ்த்தாய் அவர்களின் சிந்தனையிலிருந்து எழுதுகோல் வழியே நர்த்தனம் ஆடுவாள்! கவிதை ஒரு பேசும் ஓவியம் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு ஏற்புடையதாகக் கவிதை மலர்ந்து மணம் பரப்புகின்றது! சட்டமேலவை உறுப்பினர் பொறுப்பினை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் கவிதை ஒரு வரலாற்றுப் பெட்டகம்! தம்முடைய ‘நெஞ்சுக்கு நீதி’ வரலாற்று நூலில் முத்தமிழறிஞர் கலைஞர், அடிகள் பெருமான் கவிதையைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துப் போற்றியிருக்கின்றார்! அருள்நெறித் தந்தையின் மணிமண்டபத் திறப்பு விழாவில்கூட இக்கவிதையை முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது. “பரமகுரு வாழ்க!” என்ற கவிதை ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு அவர்களின் உண்மையான தொண்டிற்கு, உறுதியான உழைப்பிற்கு, சலனப்படாத நேர்மைக்கு, சஞ்சலமில்லாத வாய்மைக்கு அளிக்கப்பட்ட நற்சான்று அணுக்கையானவர்களிடம் விரைவில் விடைபெறப் போகின்றோம் என்ற முன்னறிவிப்பு தம்மோடு தோளோடு தோள் கொடுத்துத் தம் பணியை நிறைவாய் பரமகுரு செய்திருக்கின்றார் என்ற நிறைவு! தமிழய்யா கதிரேசனைப்