பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

229



செழுந்தமிழ் வாக்கு![1]

மானுடம் முழுமை பெறுவதற்குச் சமயம் இன்றியமையாத தேவை. மானுடத்தின் வெற்றி, உலகியலையும் உடலியலையும் மட்டும் சார்ந்திருக்கவில்லை. மானுடத்தின் வெற்றி, ஆன்மாவின் தரத்தையே சார்ந்திருக்கிறது. ஆன்மாவின் வளர்ச்சிக்கு - ஆன்மா முழுமை பெறுவதற்கு அறிவு தேவை. அறிவின் முதிர்ச்சியே சமயம். மானிடன் முதிர்ச்சியடைய-முழுமையடைய இந்த உலகியல் வாழ்க்கையும், உடலியல் வாழ்க்கையும் கருவிகள் - சாதனங்கள் ஆகும். ஆன்மா தன்னைப் பற்றியும் தன்னுடைய வாழ்க்கை சார்ந்த உலகத்தைப் பற்றியும் எண்ணியபோது கடவுள் நம்பிக்கை தோன்றியது. “இந்த உலகத்தின் வியத்தகு அமைப்புகளிலே - வியத்தகு நிகழ்ச்சிகளிலே எத்தனையோ அதிசயங்கள் விரிந்து கிடக்கின்றன. அவற்றிலே ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு முறை பிறழாத் தன்மையிருக்கிறது. இவற்றுக்கு யார் காரணமாக இருக்கக்கூடும்? நிச்சயமாக மனிதனாக இருக்கமுடியாது. “என்னுடைய அறிவால் சொல்ல முடியாத -என்னுடைய அனுபவத்தால் எட்டிப் பிடிக்க முடியாத ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதை உணர்கிறேன்” என்று கூறுகிறான் சிசரோ என்ற பேரறிஞன்.

சிலர் ஆழமாக, நுண்மையாகச் சிந்திக்க முடியாமல் - சிந்தனையில்லாமல் ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, வான் ஆகியவற்றைக் கடவுள் என்று அச்சத்தின்வழி அன்பு பாராட்டி வழிபட்டனர். இந்த வழிபாட்டில் அறிவின் முதிர்ச்சியும் இல்லை! பாதுகாப்பு உணர்வு மட்டுமே என்பது வெளிப்படை வேறுசிலர் பஞ்சபூதங்களால் ஏற்பட்ட-ஒரோ வழி ஏற்பட்ட துன்பங்களுக்குப் பயந்து வழிபட்டனர்.


  1. ★ மணமேற்குடி குலச்சிறை நாயனார் விழா 17-9-90 கருத்தரங்கத்தில் ஆற்றிய தலைமையுரை.