பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

231


வாழ்க்கையை வளமாக்கப் போதவில்லை. நம்முடைய அறிவு அகண்டமானால்தான் நாம் வளரமுடியும்; வாழமுடியும்; உய்தி பெறமுடியும். ஆதலால் பேரறிவும் பேராற்றலுமுடைய கடவுளை,- பேரறிவும் பேராற்றலுமுடைய பொருளை மனிதன் நாடினான். கடவுள், பேரறிவும் பேராற்றலும் உடையவன் என்று நம்பினான்! எப்படி நம்பினான்? வினா எழுதல் இயற்கை ! இந்தப் பரந்த உலகியற்கையில், இயற்கையின் நிகழ்வுகளில் ஏதோ ஓர் ஒழுங்கையும் (Order) முறைபிறழாத நிலையையும் (Consistency) கண்டான் ! மானுடத்தின் வரலாறு முழுதையும் கூர்ந்து நோக்கினால் ஒழுங்குகள் கெட்ட நிலையே-முறைபிறழ்வுகளே ஏராளம் ! முறை பிறழ்வுகளின் காரணமாக, கெட்ட போரிடும் உலகம் தோன்றிற்று. நோய், சாக்காடுகள் ஏற்பட்டன: இவற்றைக் கற்றும் கேட்டும் கண்டும் உணர்பவர்கள், இந்த வியத்தகு உலகின் ஒழுங்கை-முறைபிறழா நிகழ்வுகளை-கடப் பாட்டுடன் இயங்கும் தகைமையைக் கண்டுணர்ந்து இவற்றிற்குக் காரணம் ஒன்றிருப்பதாக உணர்ந்தார்கள்; உணர்கிறார்கள். அந்த ஒன்றுக்குக் கடவுள் என்று பெயர் சூட்டினார்கள். அந்த ஒரு பொருளிடமிருந்து ஒழுங்கை, அறிவை, ஆற்றலைப் பெற்று வாழ்வை முறைப்படுத்திக் கொண்டு அவ்வழி முழுமையாக்கிக்கொள்ள, கடவுளை வழிபட்டார்கள்; கடவுள் வழி நின்றார்கள்!

கடவுள் நம்பிக்கை தோன்றிய பொழுது சமயம் இல்லை; தத்துவங்கள் இல்லை. கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் தோன்றிய பிறகே சமயநெறி, வழிபாட்டு முறைகளைக் கற்பிக்கும் வகையில் முகிழ்த்தது. இத்தகு சமயங்கள் பல, உலகில் இயல்பாகத் தோன்றி வளர்ந்தன. தொடக்கத்தில் இந்தச் சமயங்களைச் சார்ந்தவர்கள் உண்மை தேடும் வகையிலும் காலப்போக்கில் தத்தம் சமயமே உயர்ந்தது என்று நிலைநாட்ட முனைந்தபோதும் தத்துவ இயல்களே தோன்றின. தத்துவ இயல்களும் விரிந்து வளர்ந்