பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயக்கம் நடத்தினார் நமது பாதுகாப்புக்காகப் போராடினார். அதுபோலவே அப்பரடிகளும் இயக்கம் நடத்தினார். நாடெல்லாம் நடந்துசென்று “மனிதர்காள் இங்கே வம்மின் ! ஒன்று சொல்லுகேன்” என்று அழைத்து அருள்நெறியில் ஆற்றுப்படுத்தினார், இங்ஙனம் அயல்வழக்கைவென்று விளங்கிய தேவாரத் திருமுறைகளைக் கூடத் தமிழர்கள் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொண்டாதாகத் தெரியவில்லை அயலவர், திருமுறைகளை முடக்கினர். காரிருள் சூழ்ந்தது. பின்னர் இராஜராஜசோழன் காலத்தில் திருமுறைகள் மீட்கப் பெற்றன. இராஜராஜசோழன் காலத்தில் தொடங்கிய சமய மறுமலர்ச்சி இயக்கம் பிற்காலச் சோழர் காலம் மூன்றாம் குலோத்துங்கன் காலம்வரை நீடித்தது. பின் தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆட்சியை இழக்கின்றனர். குகையிடிக் கலகங்கள் நடக்கின்றன. அதன்பின் தொடர்ச்சியாக மாறி மாறித் தமிழர் அல்லாதவர் ஆட்சிகள்; தமிழின் இடத்தைச் சமஸ்கிருதம் பெறுகிறது; சாதிமுறைகள் இறுக்கமாகின்றன. சமுதாய மையங்களாக விளங்கிய திருக்கோயில்களிலிருந்து மக்கள் பிரிக்கப்படுகின்றனர். திருக்கோயில்கள் உயர்சாதியினரின் ஏகபோகமாகின்றன. சமுதாயம் நிலைதடுமாறுகிறது. நமது சமயம் வளரவில்லை.

நாடு சுதந்திரம் பெற்றும் “இந்து சமயம்” என்ற கூட்டமைப்பின் காரணமாக உயர்சாதியினரின் உடும்புப்பிடி தளரவில்லை. நம்மவர்கள் கடவுளை அஞ்சியும் யாசித்தும் வழிபட்டனர். சடங்குகளும் கழுவாய்களும் மலிந்தன. நவக்கிரக வழிபாடுகளும் சிறு தெய்வ வழிபாடுகளும் வளர்ந்தன. நமது சமய நிறுவனங்கள் செயலிழந்த நிலையில் இருந்தன-இருந்துகொண்டிருக்கின்றன. இன்றையச் சூழ்நிலையில் கற்றறிந்த சிலருக்குத்தான் சித்தாந்தச் சிவநெறி தெரியும். மற்றபடி இந்து சமயம்தான்! மாயாவாதம்தான்! நமது சமயம் தனித்தன்மைகளை இழந்து தடம் மாறியது. ஏன்? இன்று நமது சைவ சமயமே சாதிச் சமயம்போல் வழங்கப்பெறுகிறது.