பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறைந்துவிட்டன. மாறாக, மனித உலகத்திற்குத் தீமையையும் தரக்கூடிய நிலையில் திசைமாறிவிட்டன. அதனால், சமயம் சுரண்டும் தன்மை வாய்ந்த-பொருளாதாரத் தன்மையுடைய முதலாளிகளுடனும் நிலப்பிரபுக்களுடனும் கூடிக் குலாவியதுடன், அவர்களுடைய அநீதித்தன்மை வாய்ந்த செயல்களுக்கு நீதிமுத்திரை குத்தித்தரும் பாதகச் செயலிலும் தலைப்பட்டன. கொடிய ஆதிபத்திய அரசுகளுடன் கைகோத்துக் கொண்டு, மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படத் தலைப்பட்டன. இதனால் - பொருளாதார ஆதிபத்திய எண்ணங்களால் சமயங்களும் பலவாயின. பின் இச்சமயப் பிரிவுகளுக்கிடையே சண்டைகள். இங்ஙனம் சமயங்களின் வரலாறு வளர்ந்தது; வளர்ந்து வந்து கொண்டிருந்தது. இனி எதிர்வரும் காலத்திலாவது சமயம் அதனுடைய தொடக்க கால இலட்சியமாகிய மனித நேயத்தினைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். ஒரே கடவுள்; ஒரே குலம்; ஒரே உலகம்! ஒரே அரசு! என்ற திசைநோக்கி வையகத்தை இயக்க, வழி நடத்தச் சமயம் முன் வரவேண்டும்.

மனித குலம் வரலாற்றுப் போக்கில் கண்ட தனிச் சிறப்புடைய கொள்கை, கடவுட் கொள்கையேயாம். கடவுட் கொள்கையின் தோற்றத்திற்குப் பல்வேறு அடிப்படைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, பயத்தின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை தோன்றியது என்பது. இந்த அடிப்படை அவ்வளவு சிறப்புடையதன்று. ஏனெனில் பயத்தைவிட மிகப் பெரிய தீமை வேறொன்றில்லை. பயம் மனிதனின் ஆற்றலை அழிக்கும். ஆதலால், பயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள, கடவுளை நாடினால் விளையக் கூடிய பயன் பெரிதாக இல்லை. எதிர் விளைவுதான் மிகுதி. கடவுள் அறிவுப் பொருள்; வாலறிவு; தனக்குவமையில்லாதது; வரம்பிலாற்றல் உடையது; அளவிலா இன்பமுடையது எனத் தேறி, சிற்றறிவு, சிறு தொழில், சிறு பொழுதின்பங்களில் சிக்கித் துன்புற்ற மனிதகுலம் தனது அறிவை, ஆற்றலை விரிவாக்கிக் கொள்ளக் கடவுளைத் தேடிக் கண்டது பிறிதோர் அடிப்படை இஃது