பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

241


அறிவியல் சார்ந்த முறை. இங்கனம் உலகத்தில் ஆயிரக் கணக்கான சமயங்கள் தோன்றின. அவற்றுல் பல மறைந்து போயின. இன்று உயிர்ப்போடு உள்ள சமயங்கள் இந்து, இசுலாமியம், கிறித்துவம், பெளத்தம் முதலியவாகும்.

இந்தச் சமயங்கள் தம்முள் ஒத்துப் போகவில்லை. என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஒத்துப் போகவும் இயலாது. மனிதனின் ஆன்மா தன்முனைப்போடு ஆவேசப்படும் இடமெல்லாம் வேற்றுமைகளே கால் கொள்ளும், இஃது இயற்கையின் நியதி. சமயங்களிடையே வேற்றுமை என்பது வேண்டும் என்றே கற்பிக்கப் பெறுபவையல்ல. ஒவ்வொரு சமய நெறியும் அது தோன்றிய காலம், நாடு, சமுதாயச் சூழல்கள், குறிப்பாகச் சமயநெறியைக் கண்டவர்கள் வாழ்ந்த சூழ்நிலை முதலியவற்றிலிருந்து விடுதலை பெற்றிருக்க இயலாது. ஆதலால், வேற்றுமைகள் இருக்கின்றன. அன்று காலமும் தூரமும் வெல்லப்படாநிலையில் வேற்றுமைகள் நீடித்திருக்கலாம். இன்று உடனிருந்து கலந்து பேசித் தீர்வு காண்பதற்குரிய சூழல்கள் உருவாகிவிட்டன. ஆதலால், பல்வேறு சமய நெறிகளையும் ஆய்வு செய்து தேர்ந்து, தெளிந்து முடிவு காணக்கூடிய வாய்ப்புகள் பெருகி வளர்ந்து விட்டன. சிந்தையில் தெளிவு காணும் முயற்சி தேவை. ஆயினும் பல்வேறு சமய அமைப்புகள் நொடிப் பொழுதில் ஒன்றாகிவிடா! அப்படி ஒன்றாக்க முயற்சி செய்வதும் நல்லதல்ல. “ஒன்று” என்ற கருத்தும் உணர்வும் முதலில் வளரவேண்டும். அவரவரும் தம்தம் சமயத்தினைச் சார்ந்தொழுகும் மனப்போக்கு வரவேற்கத்தக்கது. அதே போழ்து, மற்றச் சமயங்களிடத்தில் நன்மதிப்பீட்டு உணர்வுகளைக் காண்பிக்க வேண்டும். இஃது இன்றைய உடனடியான தேவை.

இன்றைய உலகச் சமயங்களில் பெரியவைகளாகத் திகழ்வன இசுலாமியம், கிறித்துவம், பெளத்தம், இந்து சமயம் ஆகியனவாம். “இந்து சமயம் என்ற ஒரு சமயம் இயல்பாக