பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாயிற்று. சிவம் என்ற சொல் அல்லது பெயர் சங்க இலக்கியங்களில் வழங்கப்பெறவில்லை. ஆனால் சிவபிரானின் மிகப்பெரிய அருட்செயலாகிய வானவர் வாழ அமுதம் ஈந்து தாம் நஞ்சுண்ட செய்தியை நினைவூட்டும் வகையில்

“நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே”

(புறம்-61)

என்று அதியமானை ஒளவையார் பாராட்டுகிறார். சிவனை அரன் என்றும் சிவன் என்றும் போற்றி வழிபடுகின்றனர். சிவன் உயிர்களின் கட்டுக்களை நீக்குபவன்; உலகம் சிவனிடத்திலேயே ஒடுங்குகிறது என்ற பொருளில் அரன் என்று அழைக்கின்றனர். சிவன் ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்பமாக, விளங்குவதால் சிவன் என்று போற்றுகின்றனர்.

உயிர்கள் என்றும் உள்ளவை. உயிர்கள் பலப்பல. மாயையினின்றும் உயிர்களுக்கு உடல்கள் (தனு), கருவிகள் (கரணம்), உலகங்கள் (புவனம்), அவை அனுபவித்தற்குரிய பொருள்கள் போகம்) முதலியவற்றை வழங்கியருள மாயையினைத் தமது சிற்சத்தியின் மூலமாக இயக்கிப் படி முறையில் 36 தத்துவங்களை அமைத்து உதவிசெய்தருளுகின்றான் இறைவன். இந்த வகையில் மாயை உயிருக்குப் போகத்தைத் தந்தாலும் உயிரைத் தளைப்படுத்துவதே என்று சித்தாந்தம் கூறுகிறது. மாயை என்பது ஒரு நுண்பொருள்; கண்ணுக்குப் புலனாகாத நுண்பொருள். இந்த நுண் பொருளிலிருந்தே உலகம் தோன்றுகிறது. உயிர்களின் அறிகருவிகளும் அகநிலைக் கருவிகளும் மாயையினின்றே உயிர்களுக்குக் கிடைக்கின்றன. இந்த மாயையும் நிலையானது; எங்கணும் நிறைந்திருப்பது; இந்த மாயை உலகத்திற்கு வித்துப் போன்றது. ஐம்பெரும் பூதங்கள் மாயையினின்றே தோன்றுகின்றன. உயிர்களில் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய உளத் தத்துவங்களும் மாயையிலிருந்து உற்பத்தியாகின்றன என்பதும் அறியத்தக்கது.