பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

247


சிவாகமும் திருமுறைகளும் செந்தமிழையும் சிவநெயியையும் பேணி வளர்த்துக் காத்துவந்துள்ளன.

இன்றுள்ள நாமும் இவைகளைப் பாதுகாத்து தலைமுறைக்குக் கொடுக்கவேண்டியது நமது கடமை. நமது சமயவரலாற்று மரபுப்படி நாம் சமயத் தொண்டுகளைச் சமுதாய உணர்வுடன் செய்து வரவேண்டும். உயிர் உய்யும் பொருட்டுச் செய்யப் பெறுவது வழிபாடு. உயிர் உய்யும் முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அம்முயற்சிகளுக்கு இடையூறின்றிப் பாதுகாப்புத் தருவது சமுதாயம் சார்ந்த தொண்டு. அகப்பூசையில் சிவத்தை அனுபவிப்பதே சிறந்த வழிபாடு! ஐம்புலன் அற அனுபவித்தல் என்று திருவாசகம் கூறும். புறத்தேயும் திருமேனியில் சிவத்தைக்கண்டு வழிபடுதல் பொறிகளின் சேட்டையினின்று நீங்கிப் பத்திமையடைந்து உயிர்கள் நிலைபெற்றிருக்கவேயாம். இத்தகு உயர்நிலைக்கு மனிதன் வளர்ந்துவர முதலில் மனித உள்ளம்-அதாவது மனித நேயம் பெறவேண்டும். சமுதாய அன்பும் கடமையுணர்வும் உருவமும் நிழலும் ஒத்தன.

“நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையினாற் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா என்னென்றே அலறா நில்லே!”

-திருநாவுக்கரசர்

என்ற அப்பரடிகளின் அடிச்சுவட்டில் உழவாரமும், திருத் தொண்டும் செய்து பேணிப்பாதுகாக்கவேண்டும். நாளும் திருக்கோயில் பூசனைகள் சிறப்புற நடைபெற ஏற்பாடுசெய்ய வேண்டும். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் பணியில்