பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்களுடைய மதத்தையே கற்பிக்கவேண்டும்”[1] என்று எழுதியுள்ளார்.

மானுடம் தன்னுடைய வாழ்க்கைப் போக்கில் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு வழிப்பட்ட காலம் பொற்காலம் என்று கருதத்தக்கது. தன்னிச்சையாக சமூக அமைப்பில்லாமல் நாகரிகமற்ற நிலையில் வாழ்ந்த மனிதகுலத்திற்கு நாகரிகத்தையும் சமூக வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தியதே கடவுள் நம்பிக்கைதான்! உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அடிப்படையில் கடவுள் நம்பிக்கை தோன்றி வளர்ந்துள்ளது. இந்த வியத்தகு உலகின் நிகழ்வுகளில் ஏதோ ஓர் ஒழுங்கு (Order) முறைபிறழாத நிகழ்ச்சி (Consistency) இருப்பதைக்கண்டு அத்தகு அமைப்பிற்கு மனிதனைவிட மேம்பட்டது ஒன்று காரணமாய் அமைதல்வேண்டும். அது கடவுளையன்றி வேறு யாராக இருத்தல் கூடும்? என்று கேட்டார் சிசரோ. கடவுளின் அளப்பரிய அறிவையும் ஆற்றலையும் கண்டவர்கள், அத்தகு அறிவையும் ஆற்றலையும் பெறுதலுக்கு வாயிலாகக் கடவுளை நாடினர். மிகவும் வளர்ச்சி குறைந்த மக்கள், பயத்தின் அடிப்படையிலேயே கடவுளை நம்பினார். ஆனால் உண்மையில் பயத்துக்கும் கடவுளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை அறிக!

மாந்தர் இனம் வாழ்க்கைப் போக்கில் அவாவி நின்ற பண்புகளின் அடிப்படையில் கடவுளைக் கண்டது. கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடியவர்கள் பெரும்பாலும் குணம்-பண்பு அடிப்படையில்தான் பாடியுள்ளார்கள்.

“நன்றுடையானைத் தீயதில்லானை”6

என்று கடவுளைத் திருஞானசம்பந்தர் போற்றிப் பாடியுள்ளார். “நன்றுடையான்” என்று உடன்பாட்டு முறையில் கூறினாலே போதும்! ஏன் எதிர்மறை நிலையிலும் “தீயதில்லான்” என்ற கூற வேண்டும்? நன்று என்பது குறை

  1. 5