பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

255


படும் கடவுள் ஒருவரே என்பது அனுபவம். அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ஆனால் வேற்றுமைகளையே பன்னிப் பன்னிப் பேசுபவர்கள் சமயக் கணக்கர்கள், கடுதாசிகளில் எழுதியதை ஒப்பிக்கும் புலிகள். அனுபவ ஞானிகள் சொல்லும் “ஒன்றே” என்ற உண்மை சிக்கலைத் தீர்ப்பது. கடுதாசிப் புலிகளே சிக்கலை உண்டாக்குகிறார்கள்.

கடவுள் நம்பிக்கை தோன்றி வளர்ந்து பலநூறு ஆண்டுகள் கழித்தே மதங்கள் தோன்றியிருக்க வேண்டும். மதங்கள் தத்துவ வளர்ச்சியில்-மெய்ப் பொருள், அறிவு அடிப்படையில் தோன்றின. இத்தகு மதங்கள் மெய்ப் பொருளியலை விளக்கவே தொடக்கத்தில் பயன்பட்டன. காலப்போக்கில் குழு மனப்பான்மையால் மதத்தின் பெயரால் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவேண்டும் என்ற எண்ணமும் மதத்தைச் சார்ந்தவர்களிடையே தோன்றி வளர்ந்தது. மேலும் மேலும் மதங்களுக்கே உரிய நெகிழ்ச்சித் தன்மை, மனிதநேயம் முதலிய உயரிய தன்மைகளிலிருந்து விலகி, இறுக்கமான மனப்பான்மையைப் பெற்றுக் கொடுமையான தன்மையுடையனவாக மதபீடங்கள் தோன்றின. மத பீடங்கள் மதங்களைக் குறுகிய எல்லைக் குட்படுத்தி வேற்றுமைகளை வளர்த்து மக்களுக்கிடையில் பரஸ்பர குரோதப் புத்திகளை வளர்த்துச் சண்டைகளை உருவாக்கின் கடவுள்களுக்கிடையே உருவாக்கிக் காட்டின. அவ்வழி பொருளாதார ஆதிபத்திய ஆசைகள் வளர்ந்து, மத பீடங்களுக்குள்ளேயும் அரசைச் சார்ந்தும்கூடச் சண்டைகள் தோன்றின. உலக வரலாற்றில் மதங்களின் பேரால் மதபீடங்கள் நிகழ்த்திய கொடுமைகள்-சண்டைகள் எழுதிக் காட்ட முடியாத அளவுக்கு அதிகமானவை. இங்கிலாந்தில் நடந்த ரோஜாப்பூச் சண்டைகளும் தமிழ்நாட்டில் அப்பரடிகள் மீது ஏற்பட்ட தாக்குதல்களும் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் தீ வைக்கப்பெற்ற நிகழ்ச்சியும் மனிதகுலம் வெட்கித் தலை குனிய வேண்டிய