பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

257


“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டு அல்லால்
மாறுபடுங் கருத்தில்லை.”13

என்று தாயுமானவர் விளக்குகின்றார். அருட்டிரு விவேகானந்தர் “உலகில் மதங்கள் பல வழிபாட்டு முறைகளும் பலப்பல. என்னும் அடிப்படையில் அவை ஒன்றே!14” என்று கூறியுள்ளமையை ஓர்க! உணர்க! சீக்கிய மதத்தைக்கண்ட குருநானக் “ஹிந்து என்பதும் முஸ்லீம் என்பதும் இல்லை”15என்று அருளிய உரையை உணர்க; உணர்ந்து ஒழுகுக!

“வணங்கும் துறைகள் பல பல ஆக்கி”16

என்றார் நம்மாழ்வார். இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தவே சீக்கிய மதத்தைக் கண்டார் குருநானக், அருட்பிரகாச வள்ளலார், “சன்மார்க்கம்” என்ற பெயரில் புதிய சமயமே கண்டார்.

“அச்சா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆநந்த நிலைகளெல்லாம் அறிந்தடைதல் வேண்டும் எச்சார்பு மாகியுயிர்க் கிதம்புரிதல் வேண்டும் - எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் இச்சாதி சமயவிகற் பங்கள் எல்லாம் தவிர்ந்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்”17

என்ற திருப்பாடல் சன்மார்க்க நெறி விளக்கும் திருப்பாடல். இன்று சீக்கியர்களும் சன்மார்க்க சங்கத்தினரும் என்ன செய்கிறார்கள்? அவர்களும் பழக்க வாசனையால் சார்புகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

வைணவ சீலாராகத் திகழ்ந்த இராமானந்தர் சமுதாயத்தில் பல்வேறு பட்டோரின் ஒத்துழைப்புடன் ஒரு புதிய மதத்தையே தோற்றுவிக்க முயன்றார். இராமானந்த