பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ருடைய முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா ஒரு புதிய பொலிவுடன் விளங்கும் வாய்ப்புப் பெற்றிருக்கும். அண்ணல் காந்தியடிகள் “சொந்த சமயத்தில் விருப்பமும் மற்ற சமயங்களிடத்தில் காட்டும் மதிப்புணர்வுமே சமயச்சார்பற்ற தன்மை”18 என்று விளக்கினார். சமயங்களுக்கிடையில் ஒருமை நலம் காணும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பது உண்மை. ஒருமை நலம் கண்டு அனுபவிக்க இயலாத நிலையில், மனித குலத்தின் நல்வாழ்வு கருதிச் சமயப் பொறுமையை மேற்கொள்ளுதல் வேண்டும். இந்த நூற்றாண்டிற்குச் சமயப்பொறை தவிர்க்க இயலாதது. ஆனால் வரவர இந்திய மக்கள் பாரபட்சமற்ற திறனாய்வை அணுகுமுறையை இழந்து வருகின்றனர். இன்று இந்திய மக்களுக்குள்ள பெரிய பலவீனம் இதுவே. அக்பர் சமயப் பொறையுடையவர் மட்டுமல்லர். எல்லாச் சமயங்களையும் மதித்துப் போற்றியவர். சிவபக்தியில் சிறந்து விளங்கிய மூன்றாம் குலோத்துங்கசோழன் ஜைனப் பள்ளிகளுக்கு இறையிலியாக நிலங்கள் வழங்கியுள்ளான் என்பது வரலாறு. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் கிறிஸ்துவ சமயத்தை அன்புடன் ஆதரித்து வந்தார். அல்லா பண்டிகைக்கு எல்லா தர்காக்களுக்கும் சரபோஜி மன்னர் செல்லும் பழக்கம் இருந்தமையை அறிக.

காலப்போக்கில் மனிதகுலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவுகளால் பற்றாக்குறை நிறைந்த சமுதாய அமைப்பும் உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை நிலையும் அமைந்த சூழ்நிலையில் மாந்தருக்கிடையில் இருந்த இனக்கங்கள் இல்லாதொழிந்தன. பரஸ்பரச் சார்புகள் அற்றுப்போய் எங்கும் சொத்தின் அடிப்படையில் சண்டைகள் நிகழ்ந்தன. இந்தச் சூழ்நிலையை மதத் தலைவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு ஆதிக்க சக்திகளின்பாற் சார்ந்து நின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களுக்கிடையில் வெறுப்புணர்வு