பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

263



சாந்தியும் சமாதானமும் நிலவாத வாழ்க்கையில் மானுடம் என்ன செய்ய இயலும்? இதனாலன்றோ நடையில் உயர்ந்த நாயகனாகிய இராமன் “யாரோடும் பகை கொள்ளா” நெறியைப் போற்றினான். இன்றோ இராமன் பெயரில் பகை, கலகம், துப்பாக்கிச் சூடுகள். இது அவசியந் தானா? அல்லது நியாயந்தானா? தவிர்க்க இயலாததா? தவிர்க்கக்கூடாததா? உலகில் அமைதியைப் பரப்பிப் பிணக்குகளைப் போக்கிச் சமாதானம் செய்பவர் பாக்கியவான்கள் என்று கிறித்தவம் போதிக்கிறது. இறைவா! நான் உன் அன்பு விதையை விதைப்போனாகுக!

இந்தியாவில் உள்ள பெரிய சமயங்கள் மூன்று; அவற்றுள்ளும் பெரிய சமயங்கள் இரண்டு. ஒன்று இந்துமதம், பிறிதொன்று இஸ்லாம். இந்த இரு சமயங்களைச் சார்ந்து வாழும் மக்கள் தொகை அதிகம். இந்த இரு சமயங்களிடையிலும், சமயங்களைச் சார்ந்த மக்களிடையிலும் நிலவும் நல்லிணக்கத்தில்தான் இந்தியாவின் வலிமை அமைந்திருக்கிறது என்பது விவேகானந்தரின் கருத்து. “நமது தாய்நாட்டுக்கு இந்துமதம், இஸ்லாம் ஆகிய இரு பெருஞ் சமயத்திட்டங்களின் கூடுதலே வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் ஒரேயோர் உய்யும் வகையாய் உள்ளது.”21 என்று அருளியுள்ளமையை ஓர்க.

இந்திய ஒருமைப்பாடும் மனிதகுல ஒருமைப்பாடும் ஆன்மநேய ஒருமைப்பாடும் இன்றியமையாதன. ஒருமைப்பாடு உளதாய வாழ்க்கை உருவாக மக்கள் சில நல்ல மரபுகளைப் பின்பற்றவேண்டும். மதம் என்பது வாழ்வதற்குரிய - வாழ்ந்துகாட்டுதற் குரிய சாதனம். மதம் என்பது ஆன்ம அனுபவத்திற்கு மட்டுமே உரியது. மதம் என்பது பிரசாரத்திற்கு உரியது அல்ல. பிரசாரம் என்பதே விரும்பத்தக்க ஒன்றல்ல. அதுவும் பிரசாரத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொள்வது வெறுத்து ஒதுக்கவேண்டிய ஒன்று. முன்னர்க் கூறியது போல, பெருமன்னன் அசோகன் பிரசாரப் போர்