பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

265


கூட்டமைப்பாக அமையலாம். இந்து மதத்தின் உயர் தத்துவமும் இஸ்லாமியத்தன் கடவுள் நம்பிக்கையும் கிறித்தவத்தின் தொண்டுணர்வும் பெளத்தத்தின் உயிரிரக்கமும் சமணத்தின் அகிம்சையும் ஒருங்கிணைந்ததாக அமையலாம். இந்தப் பணியைச் செய்யவேண்டிய தருணம் இதுவே. பல்வேறு மதக் கலாச்சாரங்களுக்கிடையே இணைப்பு ஏற்படவேண்டிய தேவையை இன்று உள்ளதுபோல் வேறு எப்போதும் அதிகமாக உணர்ந்ததில்லை. விஞ்ஞானச் சாதனங்கள் பூதபெளதீக உலகங்களை மிகமிக நெருக்கமாகக்கொண்டு வந்துவிட்டன. செவிக்கும் வாய்க்கும் ஓர் உடம்பில் எவ்வளவு தூரமோ அவ்வளவுதான் இன்றைய உலக இடைவெளி என்று தொலைபேசி செய்துவிட்டது; தொலைக்காட்சியின் சாதனையும் அப்படித்தான். அதுமட்டுமின்றி இன்று இந்த உலகை ஒரு நாளில் வலம் வரமுடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் மனித நெஞ்சங்கள் இணைக்கப் பெறவில்லை. மனித நெஞ்சங்களை இணைக்கும் பொறுப் புடைய மதங்கள் அந்தப் பணியைச் செய்யத் தவறியது மட்டுமன்றி அதற்கு நேர் எதிர்த் திசையில் மக்களிடையே அந்நியத் தன்மையை வளர்த்து வெறுப்பை, பகையை வளர்த்து இந்த உலகத்தை கெட்டப் போரிடும் உலகமாக ஆக்குவது வருந்தத்தக்க செயல். அதுமட்டுமல்ல. கண்டிக்கத் தக்கதும் கூட மனிதகுலத்தை வெறுப்பில் ஆழ்த்திக் கலகம் செய்யும் மதங்கள் எதற்காக? இதற்கு மதங்களின்றியே வாழ்ந்துவிட்டுப் போகலாமே!

மனிதகுலத்தின் இன்றையத் தேவை என்ன ? இன்றையத் தேவை மனிதத்துவமும் தயாவுணர்ச்சியுமே யாகும். வேதம், குர்ஆன், புராணம், சாஸ்திரங்கள் யாவும் இப்பொழுது-சிறிது காலத்திற்கு அமைதியுற்றுக் கிடக்கட்டும். பிரத்யட்ச பகவான் ஆகிய தயை, பிரேமை ஆகியவற்றின் பூஜையானது நாட்டிலே நடைபெறட்டும். பேதபுத்தியே பந்தமாகும். அபேதபுத்தியே முத்தியாகும்.....அஞ்சற்க!

கு.XII.18.