பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அஞ்சற்க! மனிதர்களாய் இருப்பீர்களாக! கிருமிகளாய் அல்ல! இந்து முஸ்லிம் கிறித்தவர் உள்ளிட்ட சகல ஜாதிப் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்வீராக. சமய தர்மத்திலே எது சர்வ ஜனப் பொருத்தமாகவும் சாதாரணமாகவும் உள்ளதோ அதையே போதிப்பீராக!”[1] என்ற விவேகானந்தரின் அறிவுரை இன்று உலகமாந்தர் அனைவரும் ஏற்று ஒழுகவேண்டிய ஒன்று.

நமது தாய்நாட்டின் ஒருமைப்பாட்டை மனிதகுல ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதே இன்றுள்ள ஒரே குறிக்கோள். இந்தியாவைக் குழப்பங்களிலிருந்து மீட்க வேண்டும். இன, சாதி மதப்போராட்டங்களைத் தவிர்ப்போம்! அறவே விலக்குவோம். இந்தியாவை வலிமையும் வளமும் உடைய நாடாக அமைப்பதற்குரிய உழைப்புப் போரில் ஈடுபடுவோம்! இந்துவின் மூளை, இஸ்லாமிய உடல், கிறித்தவ இதயம் பெற்றுக் கிளம்பிடுவோம்! உரமான நோக்கமும் உயர்வான உள்ளமும் கொண்டு இந்தப் புண்ணிய யாத்திரையை நாம் தொடங்கிவிட்டோம் பயணம் நீண்டதாக அமையலாம். ஆனால் இலக்கை அடையும் வகையில் நமது பயணம் தொடர்க!

ஒன்றுசேர்ந்து நம்மைக் காத்துக்கொள்வோம்!
ஒன்றுசேர்ந்து உண்போம்!
ஒன்றுசேர்ந்து வீரியம் பெறுவோம்!
ஒன்றுசேர்ந்து அறிவொளி பெறுவோம்!
எவரையும் வெறுக்காமல் இருப்போம்!
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!

“திருவருள்”, இதழ்-நவம்பர்-90


அடிக்குறிப்புகள்

1. டால்ஸ்டாய் கட்டுரைகள் “வாழ்வும் மதமும்” பக். 78

2. கம்பராமாயணம்

  1. 22