பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழில் வழிபாடு

275


நினைக்கிறது. அது போலவே, வழிபாட்டுத் துறையில், பரவலாகச் சமஸ்கிருதமும், பிராந்திய எல்லையில் விரும்பியவர்களுக்குத் தாய்மொழியும் இருக்க வேண்டும் என்று சொல்வதினால் தேசீய ஒற்றுமை பாதிக்கக் கூடியதில்லை.

3. திருக்கோயில் நடைமுறைகள் சிவாகமங்களின் வழி நடைபெறுகின்றன. அதற்கு மாறாக, தமிழில் செய்யக்கூடாது என்று சிலர் சொல்லுவர். அதுவும் உண்மை அல்ல. இன்று அருச்சனைக்குப் பயன்படுகிற ‘அஷ்டோத்திர’ ‘சகஸ்ர நாமங்கள்’ சிவாகமங்களுக்கு உரியனவல்ல. மிகப் பிற்காலத்தில் வடமொழிப் புராணங்களிலிருந்து புகழ் மொழிச் சொற்றொடர்களாகத் தொகுக்கப்பெற்று அருச்சனைக்கு உரிமையாக்கப் பட்டனவேயாம். ஆதலால் இன்றைய அருச்சனை முறையும் சிவாகமங்களுக்கு உடன் பாடில்லாதனவேயாம். எப்படி வடமொழி சொற்றொடர்பை அருச்சனைக்கு உபயோகப்படுத்திக் கொண்டோமோ, அப்படி திருமுறைப் பாடல்களையும் அப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பெற்ற சொற்றொடர்களைக் கொண்டு அருச்சனை செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதேயாகும்.

4. ஓம், ஹாம், ஹறிறீம், வெள ஷட் ஆகிய மந்திரங்கள் வடமொழியைச் சார்ந்தனவென்று சிலர் சொல்லுகின்றனர். அதுவும் நிறைவான கருத்தல்ல. ஓம் என்பது தமிழ் மந்திரமே என்பது பல பேரறிஞர்களின் முடிவு. ஹாம் ஹிறீம், ஹெளம், போன்றவை எம்மொழியையும் சார்ந்த மந்திரங்கள் அல்ல. மொழிகடந்த ஒலிக்குறிப்புகளேயாம்.

5. திருவைந்தெழுத்து வடமொழி என்று சிலர் சொல்லுவர். அதுவும் நிறைவான கருத்தல்ல. திருவைத்தெழுத்து தமிழ்மந்திரமே என்று சைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகம், மறைமலையடிகள் ஆகியோர் தெளிவாக வரையறுத் துள்ளார்கள். எனினும், ஒரே மந்திரத்தை இருமொழியினர்