பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தம்தம் மந்திரமென்று சொல்லிக் கொள்வதில் நன்மையே தவிர இழப்பொன்றுமில்லை. திருவைத்தெழுத்து எம்மொழி மந்திரமாயினும் ஆகுக.

6. வழக்கத்தில் இருக்கின்ற முறையை மாற்றக்கூடாது என்று சிலர் சொல்லுகிறார்கள். காலத்திற்குக்காலம் உண்மை மாறுவதில்லை. ஆனாலும், நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் மாறி வருவதை அறிஞர்கள் உணர்வர். தாயுமானாரும் “காலமொடு தேசவர்த்தமானமாகிக் கலந்து நின்ற கருணைவாழி” என்றார். இறைவன் யுகத்திற்கு யுகம் வெவ்வேறு பெயர்களும் வடிவங்களும் கோலங்களும் ஏற்று அருள் வழங்கி இருக்கிறார் என்பது வரலாறு. அப்படியானால் நடைமுறையை மாற்றக்கூடாது என்பது பூரண விவாதமாகமாட்டாது. தொடக்க காலத்திலிருந்து இன்றிருக்கும் நிலையிலேயே வழிபாடு, நடந்து வந்ததுவென்று சொல்ல முடியாது. மிக அண்மைக்காலம் வரையில், எல்லோரும் மூர்த்தியைத் தீண்டி, திருமுழுக்கு செய்து, மலர்தூவி வழிபாடு செய்கின்ற முறை இருந்திருக்கிறது என்பதைத் திருமுறைகளின் மூலமும், புராணங்களின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. பின்னர் வழிபாட்டு முறையில் ஒழுங்கு உண்டாக்குவதற்காகவே, இப்பொழுதுள்ள நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழ் வழிபாட்டுமுறை மிகத் தொன்மையானது என்பது நமது கருத்து. நாம் அதைப் புதியதாகக் கருதவில்லை. அப்படியே புதியதாக வைத்துக்கொண்டாலும், நாம் இருக்கிற முறையை மாற்றச் சொல்லவில்லை. இருக்கும் முறையோடு தமிழிலும் அருச்சனை செய்கின்ற முறையை இணைப்பாகச் சேர்த்துக் கொள்ளவே சொல்லுகிறோம்.

7. இன்று திருக்கோயில்களில், திருமுறைகளுக்குரிய இடம் கொடுக்கப் பெற்றிருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். திருமுறைகளுக்கு உரிய இடம் இருக்கிறதா என்ற கேள்வி அல்ல இங்கு தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்