பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழில் வழிபாடு

277


என்ற கோரிக்கை திருமுறைகளுக்கு உரிய இடத்தை வாங்குவதற்கென்று எழுந்ததல்ல. வழிபாடும் அருச்சினையும், உரிய பயனைத்தர தாய்மொழியில் வேண்டும் என்பதே. இதை நோக்க இவ்விவாதம் பயனில்லாமல் போகின்றது. மேலும் திருமுறைகளுக்கு எத்தகைய இடம் கொடுக்கப் பெற்றிருக்கிறதென்பதையும் ஆராய்ச்சி செய்வோம். உள் வீட்டில் ஒருவரை இருத்தி உணவிட்டு, அதே நேரத்தில் இன்னொருவரை வீட்டு வெளியே நிறுத்தி உணவிட்டால், வெளியிலிருந்து உணவு பரிமாறப்பட்ட ஒருவன் தன்மானம் உடையவனாக இருந்தால் உணவுதான் கிடைத்திருக்கிறதே என்று அமைதி கொள்வானா? அல்லது அமைதி கொள்ளத்தான் முடியுமா? இறைவன் எங்கே? எங்கே? என்று தேடி அலைந்த-அலைந்து கொண்டிருக்கின்ற சமஸ்கிருதம் இறைவனுக்கு அண்மையில் பூசனை மொழியாக இருக்க, இறைவன் இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று கண்டு எழுதி காட்டித் தந்த தெய்வத்தமிழ் வெளியிலும் அதுவும் ஒரு உபசாரப்பொருளாக இருப்பதைத் திருமுறைகளுக்கு உரிய இடம் என்று கருதமுடியுமா?

8. சமஸ்கிருதத்தில் இருப்பவைகளை மொழிபெயர்த்து அர்ச்சனை செய்வதனால் சுவைக்காது என்று சிலர் சொல்கிறார்கள். நாம் சமஸ்கிருதத்திலுள்ள அருச்சனைகளை மொழிபெயர்த்து அருச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்குடையோமில்லை. இயல்பிலேயே, திருவருள் நலம்பெற்ற ஞானப்பாடல்களாக இருக்கும் திருமுறைகளைக் கொண்டும், அவைகளிலிருந்து தொகுக்கப்பெற்ற அருச்சனைக் கொத்துக்களைக் கொண்டும் அருச்சனை செய்ய வேண்டும் என்பதே நமது கொள்கை. ஆதலால் மொழிபெயர்ப்புச் சிக்கல் எழ இல்லை.

செய்முறை

தமிழகத் திருக்கோவில்களில் விரும்புகிறவர்களுக்குத் திருப்பதிக அருச்சனையும், தமிழில் அருச்சனையும் செய்துதரப்பெறும் என்ற அறிவிப்பு தரவேண்டும்.