பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்களால் பாராட்டப் பெற்றுள்ளது. நால்வர் பெருமக்கள் “திருநெறி” என்றும், “செந்நெறி” என்றும் பாராட்டுரை பகர்ந்துள்ளார்கள்.

சித்தாந்தத்தின் சீர்மை

உலகில் பயில்கின்ற சமயங்கள் பல. அவை, பலவும் ஒன்றோடொன்று ஒவ்வாது தம்முள் மாறுபட்டுள்ளன. சைவசித்தாந்தக் கொள்கை எச்சமயத்தினரோடும் முற்றிலும் பிணக்குக் கொள்ளவில்லை. அவ்வவற்றின் கொள்கைகளை யெல்லாம், சோபான முறையில் வைத்து, அவற்றில் மேம்பட்ட நிலையைப் போதிக்கின்றது. சமய உலகின் குழப்பங்கள் தலைகாட்டாத உயர்ந்த நெறியில் சைவம் இலங்குகின்றது.

“வேதாந்தத்தின் தெளிவாம் சைவசித்தாந்தத்திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் என்றார் உமாபதி சிவம். சித்தாந்தம் என்ற சொல்லுக்கே முடிந்தமுடிபு என்பதுதான் பொருள். வழக்கில் சித்தாந்தம் என்றால், அது சைவத்தையே குறிக்கிறது.

“சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூர்வபக்ஷங்கள்” என்பது இரத்தின திரயம். அந்தம் வேதாந்தம்; அந்ததரம் சித்தாந்தம் ஆகலின், அதனைப் பெற்றோரது பெருமை கூறுவார், “சிவமென்னும் அந்தர என்றார்” என்பது சிவஞான பாடியம்.

சைவ சாத்திரக் கொள்கை

சைவம் முப்பொருளுண்மையைப் பேசுகின்றது. முப்பொருளாவன, இறை, உயிர், தளை, என்பனவாம். இவற்றின் உண்மையினையும், இலக்கணத்தையும், தெளிவுற எடுத்துப் பேசுகிறது சைவம். இவ்வுலகம் உள்பொருள், தோற்றம், நிலை, இறுதியாகிய முத்தொழிற் படுகின்றது. இங்ஙனம் முத்தொழிற்படுகின்ற உலகம் சடப் பொருள்.