பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைமையுரை

291



தமிழர் சமயத்தில் ஆண்டான் அடிமைத் திறம் மிகச் சிறந்தது. இன்று அடிமையென்ற சொல் மக்களினத்தால் வெறுக்கப்படுகிறது. ஆனால் அடிமை என்ற சொல் அவ்வளவு தீயதல்ல. அடிமைத் தனத்தில் உள்ள நன்மை தீமைகளை அடிமையாக ஆட்படும் இடத்தைப் பொறுத்தது. சின்னாட் பல்பிணி வாழ்க்கைக்காகச் சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய இறக்கும் தன்மையை இயல்பிலேயே பெற்ற மக்களிடம் அடிமைப்படுவதில் இகழ்ச்சி உண்டு. தீமையும் கூட உண்டு. ஆனால் வரம்பில் ஆற்றலும் இணையில் இன்பமும் உடைய பிறவா யாக்கைப் பெரியோனிடத்தில் அடிமைப்படுவது சாலவும் நன்மையுடைத்து. அடிமைப் படாததால் தீமைகூட விளையலாம். இத்தகு அடிமைத் திறத்தை நினைந்து நினைந்து வரவேற்றார்கள் தமிழ்ச் சான்றோர்கள். அருள் மொழி மணிவாசகப் பெருமானார் அருளிய திருவாசகத்திலே அடிமை வேண்டி வேண்டிக் கேட்கப்படுகிறது. தேசீய கவிதை முழக்கி விடுதலை முரசு கொட்டிய தேசீயக் கவிஞர் பாரதியாரும்,

“பூமியில் எவர்க்குமினி அடிமைசெய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்”

என்று கூறுகின்றார். சமய வாழ்வில் கூறப்படும் அடிமை குற்றேவலுக்காக அல்ல. எண்ணத்தால் அடிமை.

தமிழர்கள் வாழ்வில் நீதி பொருந்தியிருந்தது. நேர்மை நிலவியிருந்தது. அன்பு மலர்ந்திருந்தது. அறவுணர்வு மண்டியிருந்தது. அவர்கள் மறந்தும் கூட தீயன செய்ததில்லை. செய்ய நினைத்ததுமில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் அகமும் புறமும் ஒத்திருந்தது. சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டிருந்தன. பிறர்நலம் பேணுகின்ற பெருமனம் பெற்றிருந்தார்கள். காரணம் கடவுட்பற்று, கடவுள் நம்பிக்கை. சென்ற சென்ற இடத்திலெல்லாம் சென்று பற்றுகின்ற அறிவைத் தீதினரின்றும் விலக்கி நன்மையின் கண் உய்ப்பது