பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மிக மேம்பட்டுள்ளது. மற்றொரு மீளா உலகைப் பற்றிய அறிவு குறைந்து வருகிறது. சிறப்பாக வாழ்க்கையோடியைந்த சமயப் பண்பு அருகி வந்து விட்டது. வாழ்க்கை வேறு சமயம் வேறு; சடங்கு வேறு என்ற புல்லிய உணர்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டனர். இதனால் இதயம் மடிந்தது. எலும்புடம்பு இருக்கிறது. நெஞ்சம் தோய்ந்த சமய வாழ்வு குறைந்து வரலாயிற்று.

தமிழினத்தின் தனிமைப் பண்பு சமரச நோக்கு. தமிழ்கண்ட உன்னத உயர்மொழி ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பதாம். இடையில் இந்த நிலை மாறியது. சமய வாழ்வில் சாதி முதலிய புல்லிய உணர்ச்சிகள் தோன்றி வளர்ந்தன. அகவுணர்வைப் போற்றிக் காத்துக் கொள்வதற் காகக் கையாளப் பெற்ற சமயச் சடங்குகள் சடங்குகளாகவே காட்சியளித்தன. நெஞ்சந் தோய்ந்த சமய வாழ்வு இல்லாமற் போய்விட்டது. புறம் வளர்ந்தது. அகம் தேய்ந்தது. அதனால் தமிழகம் மிகத் தாழ்ந்துவிட்டது. தாழ்ந்தமைக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள். தமிழ் நாட்டிற் பிறந்தாரனைவரும் தமிழர்கள். பாதிக்கு மேற்பட்ட மக்கள் சைவத்திருநெறி நின்று ஒழுகுகின்ற பேறு பெற்றவர்கள். ஏனைய மதக்களில் பெரும் பகுதியினர் வைணவக் கொள்கையினர். ஒரு சிலர் பிற சமய மக்களும் உண்டு. இங்ஙனம் வாழ்ந்த நூற்றுக்கணக்கான சைவக் கொள்கையினர் பிற மதம் புகுந்து கொண்டேயிருந்தனர். ஆயிரக்கணக்கான ஆலயங்களிலிருந்தும் நூற்றுக் கணக்கான மடாலயங்களிலிருந்தும் இவை தமக்கு மூன்றரை கோடி ரூபாய் வருமானம் இருந்தும் பிற மதம் புகுகின்ற சகோதரர்களைத் தடுக்கவில்லை. தடுக்க நினைக்கவும் இல்லை. இதனால் இவற்றிற்கு விளைந்த கேடு எண்ணும் தரத்ததா? பிற மதத்தினர் தம் மதப் பிரசாதத்திற்காக சைவத் திருநெறியின் கொள்கைகளைச் சிறப்பாக உருவ வழிபாட்டுக் கொள்கையினை எள்ளி நகைத்துப் பேசிவந்தனர். ஏனென்று கேட்பார் இல்லை. இதனையொட்டி நம்மவரினும் பலர்