பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோரை மண்டித் தரிசாகக் கிடந்தாலும், புலன் வழி ஏகி, மனம் போன போக்கில் சென்றால் ஆங்குச் சிற்றின்பங்களும், “பெருந்துன்பங்களுமே” விளையும். ஒரு முடிவுடைய இன்பங்களும், முடிவிலாத் துன்பங்களும்தான் மிஞ்சும்.

இச்சிற்றின்பங்களும் அளவீடற்ற இடுக்கண்களும் அடுக்கடுக்காக வந்து புதை சேற்றில் ஆழ்த்தும்.

இன்னும் ஒவ்வொரு பொழுதும் மலமொடு எழுந்திருந்து பசி, நித்திரை, யாத்திரை, பிழைத்து, பித்த உலகத்தில் பித்தனாக ஆகி, மதம் கொண்ட யானையைப் போன்று ஆசை என்ற வலையில் வீழ்ந்தும் கல்வி என்னும் பலகடல் பிழைத்தும்; பொறாமை என்ற பேயால் ஆட்டு விக்கப்பட்டும்; செல்வம், வறுமை, அறிவு இவைகளில் தேனில் விழுந்த ஈயாக மயங்கி, வாது பேசி, ஆறுகோடி மாயா சக்திகள் ஊடே பிழைத்தும, நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியும், உறவு சுற்றம், நட்பு என்னும் அலைகடலில் வீழ்ந்தும், சமயம், மதம், சாத்திரம், கோத்திரம், விரதம் இவைகளில் மயங்கியும், ஐம்பூதங்களின் அல்லலில் சிக்கியும், இன்னும் பல அளவீடற்ற மாயையின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி வீணே விழலுக்கு இறைத்த நீர் போல பிறந்து, பிறந்து, இறந்து, இறந்து பவக்கடல் ஏறாது. பிறவிக்கரை காணாது நீந்திக் கொண்டேயிருக்க வேண்டியதுதான், தன்னையறிந்து இன்பமுறாத வரையில்.

தன்னை அறிந்து இன்பமுறுவதாவது ‘பேரின்பம்’ எனப்படும். இப் பேரின்பத்திற்கு முதலும் முடிவும் இல்லை. பேரின்பத்தை அனுபவிக்குங் காலத்துச் சலிப்பில்லை, வெறுப்பில்லை, கசப்பில்லை. தன்னை அறிய ஆங்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் தன்னை அறிந்த மாத்திரத்திலேயே நிர்மலமாகி விடும். எல்லாமும் தானேயாகி பேரின்பத்தோடே தன்மயமாதல்.