பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

303



இப்புன்புலால் யாக்கை புரையோடிக் கனியுமாறு, கண்ணார நீர் மல்கி, கசிந்துருகி, உள்ளம் நெக்குருகி, நாயினேன், பேயினேன், வன்மனத்தேன் என அரற்றி தான் என்ற அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து ‘நெகிழ்ந்து, நெகிழ்ந்து, சிந்தித்து, சிந்திக்கும் பொருளும், சிந்திக்கும் திறனும் ஒரே தன்மையாகி முயற்சி செய்து, நொந்து நொந்து, அழுது, புலம்பி, அரற்றி, எவ்விதத்தாலும் சலனம் அடையாது. நிலைகுலையாது, தாயையே நினைந்து அழும் சேய் போல ஒரே குறிக்கோளாக நம் மனதை உள்முகமாக நிறுத்தி ஒருமைப் படுத்தித் துய்மை செய்தோமானால் ஆங்குத் தோன்றும் உள்ளொளியை (சோதியை)க் கண்டு, அதாவது ‘தன்னை’ அறிந்து இன்ப முறலாம்’.

இப்பேரின்பத்திற்கு ஒரு வரையறையில்லை. இதனால் தான் தன்னை அறிந்து இன்பமுற்றவர்கள், “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றனர்.

‘ஒருநாமம், ஓர்உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி, நாம்-தெள்ளேணம் கொட்டாமோ”

— திருவாசகம்

என்ற மணிவாசகரின் மணிவாக்காலும் இதை உய்த் துணரலாம்.

‘உன்னையே நீ அறிவாய்’-என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞரான சாக்ரட்டீஸ். ஆகவே நம்மையே நாம் நன்கு அறிந்தோமானால் நடப்பது யாவும் நலமே பயன் என்னவாக இருக்கும் எனச் சிந்திக்க வேண்டா.

நம்மை நாம் அறிந்து கொள்ளாத போதுதான் பலனைப் பற்றி ஏங்கி, எவ்வாறு வழி தவறிய ஒருவன் திகைப்பானோ அவ்வாறு இவ் உலகாயதத்தில் தவிக்க வேண்டி உள்ளது. இவ்விதம் தவிப்பதால் தடுமாற்றமும், தடுமாற்றத்தில் மனம் அமைதியிழந்து தன்னை அறியாமல்