பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விழலுக்கு நீர் இறைத்து எட்டிக் காயாகத் தனக்கும் பயனின்றி, பிறருக்கும் பயனின்றிக் கெடுகின்றனர் என்பதைத் திருமூலர் திருவாக்கால் அறியலாம்.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”.

— திருமந்திரம்

தன்னை அறிந்தால் பிறிதொன்றால் ஆங்கு யாதொரு தீமையும் இல்லை. இதனால்தான் கணியன் பூங்குன்றனார் என்ற பெரும் புலவர் புறநானூற்றில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா"-என்றார்.

தன்னை அறிவதே ஞானத்தின் இறுதி நிலையாகும். தன்னை அறிந்தால் ஆங்கு தன்னுள்ளே ஈசனைக் காணலாம்.

‘தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே”

— திருமந்திரம்

என்ற திருமூலர் வாக்காலும்,

“தேடிக் கண்டு கொண்டேன்-தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்”

— தேவாரம்

என்ற அப்பரடிகள் வாக்காலும் அறியக் காண்கிறோம். இக்கருத்தையே உணர்ந்த தாயுமானவரும்,

“நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்-அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”

என்று தாமும் பரமும் ஒன்றாகிய நிலையை எடுத்தியம்புகின்றார்.

தன்னை அறிந்து இன்பமுற்றவர்கள் கூற்றுவனுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்பதைத் திருமந்திரத்தால் அறியலாம்.