பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிரினத்திற்குக் கொல்லாமை அன்பு காட்டி, வாழவைக்கும் மன்பதையின் இன்ப மகிழ்ச்சியே மதத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். மன்பதையை, நேர்மை, அறம் ஆகிய அரண்களால் காக்கின்ற மதமே தேவை. அதனாலன்றோ அப்பரடிகளும் கடவுளை “நீதியே” என்று கூறி வாழ்த்தினார்.

சமயப் பல்கலைக் கழகங்கள்

ழங்காலம் முதலே மனிதனுக்குத் தன் வாழ்வில் ஒழுங்கு, அமைதி, நீதி, இன்பம், அன்பு ஆகியவை இருத்தல் வேண்டுமென்ற ஆர்வம் அவனை அறியாமலேயே அவனுள் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தின் தூண்டுதலே சமயமாக மலர்ந்தது.

சமயம்-மனிதனின் உள்ளத்தைச் சமைத்துப் பக்குவப் படுத்துவது. அவனுடைய வாழ்வில் நிகழும் ஆவேச உணர்வு, பரபரப்பு உணர்வு, பிறருக்குத் துன்பம் இழைக்கும் தீய உணர்வு ஆகியவற்றை அடக்கி அவனை நல்வாழ்க்கைக்குப் பக்குவப்படுத்துவது சமயம். மற்றவர்க்குப் பயன்படுமாறு வாழ்பவனே-பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் வாழ்பவனே முதிர்ந்த சமய வாழ்வு உடையவனாவான்.

நம்முடைய சமய வாழ்க்கைக்காகச் சென்றகாலத் தலைமுறை திருக்குறளைத் தந்தது. திருமுறைகளைத் தந்தது. எல்லாம் தந்தது. தராதது ஒன்றும் இல்லை. மனிதனது படைக்கும் ஆற்றலினால் ஒரு தலைமுறைக்கும் மற்றொரு தலைமுறைக்கும் தொடர்ச்சி உண்டாகிறது. நிகழ்காலத் தலைமுறையினராகிய நாம் என்ன செய்துகொண் டிருக்கிறோம். வரும் தலைமுறையினருக்கு நாம் என்ன படைத்துக் கொடுக்கப் போகிறோம் என்று சிந்தித்தல் வேண்டும்.

சமய வாழ்க்கைக்கு நம் ஐம்பொறிகளைப் பக்குவப் படுத்தல் வேண்டும். ஐம்பொறிகள் மனிதனுக்குத் துணையும்