பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நல்ல சமய வாழ்வு உள்ள நாட்டில் சட்ட புத்தகங்களுக்கு வேலையில்லை. வேத புத்தகங்கள் செல்வாக்கு இழந்த நாட்டில் வேந்தனும் கொடிய அரசியல் நடந்த வேண்டி இருக்கும். இப்பொழுது சமயம் சமுதாயத்தின் ஒரு பகுதியாகத் தான் கருதப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். சமுதாயம் முழுவதிலும் சமயம் ஊடுருவி நிற்றல் வேண்டும்.

நாம் புதுமையை விரும்புகிறோம். பழைமை தீயதன்று. இறைவனைப் “பழையோன்,” “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்” என்கிறோம். பழைய அடிப்படையை மாற்றாமல் புதுமையை மேற்கொள்கிறோம். பழைய கோவிலைப் புதுப்பித்துக் குட நீராட்டு விழா செய்வது போல சமய சமுதாயத்தையும் புதுப்பிக்கும் நல்ல தொண்டினை நாம் செய்தல் வேண்டும். நாம் சமய வழிப்பட்ட சமுதாய வரலாற்றின் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும்.

மறைமலை அடிகள், திரு.வி.க, கா.சு. பிள்ளை போன்றவர்களால் தொடங்கப் பெற்ற சமுதாயப் பணி இடையில் தளர்ச்சி அடைந்தது. இத்தலைமுறையில் நாம் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய பயணத்தின் எல்லை நெடுந்தூரத்தில் இருக்கிறது. தளராது நடந்து செல்லுதல் வேண்டும். சமுதாயத்தில் இடைக்காலத்தில் வந்து கலந்துள்ள தீய, நஞ்சு உணர்வுகளை மாற்ற வேண்டும்.

கோயிலைத் தழுவிய குடும்பங்களும், குடும்பங்களைத் தழுவிய கோவிலும் அமைகிற சமுதாயத்தை உருவாக்குவதே நம் பணியின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். இத்திருத் தொண்டில் முயலும்போது பல இன்னல்கள் ஏற்படலாம். அவற்றிற்கெல்லாம் தளராமல் வெற்றி காணும்வரை உழைக்க வேண்டும். இந்து சமயம் இந்த நல்ல தொண்டு புரிவதற்கான வழி வகைகளைச் சிந்தித்துச் செயலாற்ற முற்படும் என்று