பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலையை இழக்காவிடினும், ஆக்கரீதியான வள்ரச்சியைப் பெறமுடியவில்லை யென்பது மறுக்க முடியாத உண்மை.

ஒழுங்கினைக் காப்போம்!

பொதுவாக உடல் மூச்சினை இடையீடின்றி உயிர்த்தல் போல நெஞ்சு இறைவன் நாமத்தை இடையீடின்றி எண்ணிக் கொண்டேயிருத்தல் வேண்டும். இதுவே சமய நெறி நிற்போரின் உயர்சீலம். அடுத்து, குறைந்தது நாளொன்றுக்கு மூன்று வேளை வணங்க வேண்டும். காலை, உச்சிப்பொழுது, மாலை இறைவனை வணங்க வேண்டுமென்பது நியதி; மரபு.

இந்த வழிபாட்டு முறையை இன்றைக்கு இந்துக்களில் பின்பற்றுபவர்கள், விரல் விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கை யினரேயாவர். நாள்தோறும் ஆலயம் தொழுவது நமது ஆன்றோர் மரபு. ஆனால் இன்று நாள்தோறும் ஆலயத்திற்குச் செல்பவர் எண்ணிக்கை இந்து சமய மக்கள் தொகையை நோக்க மிகக் குறைவு. பொதுவாக இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திருவிழாவிற்குத் திருவிழா திருக்கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். இந்தக் குறை நீங்கச் சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வார வழிபாட்டு இயக்கங்கள் அறிமுகப்படுத்தப் பெற்றன.

வார வழிபாடு என்ற சொல் திருமுறை வழக்குச் சொல். அதாவது அன்பினால் செய்யும் வழிபாடு வார வழிபாடாகும். ஆனால் அது நடைமுறையில் வாரத்துக்கொருமுறை செய்யும் வழிபாடாயிற்று. இந்த வார வழிபாட்டு முறையிலும் போதிய ஒழுங்குகள் அமையவில்லை. ஊர்தோறும் கோயில்தோறும் வாரவழிபாடு நிகழும் கிழமைகள் வேறுபடுகின்றன.

ஆதலால் பொதுவாக இந்துக்கள் அனைவருக்கும் உகந்ததாகிய வெள்ளிக்கிழமையை வார வழிபாட்டு நாளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல்; எல்லா ஊர்களிலும்